கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீன ரோஜாப் பூக்களின் வரத்து குறையும் என்பதால் உள்ளூர் ரோஜாக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என ஓசூர் பகுதி ரோஜா விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி சீரான சீதோஷண நிலை நிலவுவதால் திறந்தவெளியிலும், பசுமைக்குடில்களிலும் பல ஆயிரம் ஹெக்டர்களில் ரோஜா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
ஒசூர் ரோஜா மலருக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புனிதவெள்ளி, காதலர் தினங்களில் அதிக அளவிலான மலர்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்தாண்டு காதலர் தினத்திற்காக சீனாவிலிருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் காரணமாக சீனப் பூக்களின் ஏற்றுமதி குறைந்து இந்திய மலர்களின் ஏற்றுமதி அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்தாண்டு ஒசூரில் இருந்து காதலர் தினத்திற்காக வெளிநாடுகளுக்கு 2 கோடி மலர்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறும் விவசாயிகள், தற்போது வரை உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா மலர் 10 ரூபாய்க்கும், ஏற்றுமதி 15 ரூபாயுமாக இருந்து வருவதாகக் கூறுகின்றனர். காதலர் தினத்துக்கு இன்னும் 15 நாட்கள் உள்ளதால் ரோஜா மலரின் விலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசு அண்மையில் 21 கோடி ரூபாயில் சர்வதேச மலர் ஏல மையம் ஒசூரில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்தப் பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.