கோவையில் சிறுவர் சிறுமிகளின் தலையில் இரும்பு சட்டிகளை சுமக்க வைத்தும், சிறுவர்களை அரை நிர்வாணமாக அமர வைத்தும் மத்திய கல்விக்கொள்கையை கண்டித்து அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கவே சமச்சீர் கல்விமுறையில் மூன்று பருவங்களாக பாடங்களை பிரித்து ஆண்டு இறுதி தேர்வு நடத்தி வந்தது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
தற்போது 5 ஆம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொது தேர்வு என்று அறிவிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
3 வது பருவத்துக்கு மட்டும் படித்த பாடங்களை தேர்வில் எழுதுவதற்கே கிராமப்புற அரசுபள்ளி மாணவர்கள் திணறிவரும் நிலையில் முதல் பருவம், இரண்டாம் பருவத்தையும் சேர்த்து பொது தேர்வில் எழுதவைப்பது நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என்றும் ஏராளமான மாணவர்கள் தோல்வியடையக்கூடும் என்பதும் கிராமப்புற மாணவர்களின் பெற்றோரின் ஆதங்கமாக உள்ளது.
இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைத்து கோவை செஞ்சுலுவை சங்கம் முன்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பள்ளி சீருடையுடன் சில சிறுவர் சிறுமிகளை அழைத்து வந்திருந்த அரசியல் கட்சியினர் அவர்களது தலையில் இரும்பு சட்டிகளையும், மூட்டையையும் சுமக்க வைத்திருந்தனர்
இன்னும் சில சிறுவர்களின் கைகளில் வாளி, துடைப்பம் மற்றும் கட்டுமான பொருட்களையும் கையில் கொடுத்து வெயிலில் நிற்க வைத்திருந்தனர்.
ஒரு சிறுவனை சட்டையை கழற்றி போராட்டம் நடந்த சாலையில் அரை நிர்வாணமாக அமரவைத்திருந்தனர்
போராட்டம் நடத்த அரசியல் கட்சியினருக்கு முழு உரிமை உள்ளது என்றாலும் போராட்ட முறை முற்றிலும் தவறானது என்றும் சிறார் சிறுமிகளை போராட்டத்திற்கு அழைத்து செல்வதே குற்றம் என்று சுட்டிக்காட்டும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், அதிலும் அவர்கள் தலையிலும் கையிலும் கட்டுமான வேலைக்குரிய பொருட்களை சுமக்கவைத்தது தண்டனைக்குரிய குற்றம் என்கின்றனர்.
போராட்டத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள், குழந்தைகள் துன்புறுத்தப் பட்டதாக புகார் அளித்தால் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சியினர் மீதும் கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்கின்றனர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள்.
அரசியல் கட்சியினர் தங்கள் சுய விளம்பரத்துக்க்காக சிறுவர் சிறுமிகளை அழைத்து வந்து போராட்டம் நடத்துகின்றனர் என்பதற்கு போராட்டம் குறித்து கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொடுத்ததை மட்டும் விவரித்த இந்த சிறுமியின் பதிலே சான்றாக அமைந்தது
வரும் காலங்களில் அரசியல் கட்சியினரால் சிறுவர் சிறுமிகள் போராட்ட களத்திற்கு அழைத்து செல்லப்படுவதை தடுக்க சம்பந்தபட்டவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.