தருமபுரி மாவட்டம் அரூர் அருகே முறையாகப் பராமரிக்கப்படாத கோழிப்பண்ணையின் கழிவுகளில் இருந்து உருவாகும் ஈக்களால் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரூரை அடுத்த கருங்கல்பாடி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது எஸ்.கே.எம் கோழிப்பண்ணை. இக்கோழிப்பண்ணையை சுற்றி ஆலம்பாடி, இளங்குண்ணி, மொண்டுகுழி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
எஸ்.கே.எம் கோழிப் பண்ணையில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை என்றும் அதன் காரணமாக கழிவுகளில் இருந்து ஏராளமான ஈக்கள் உற்பத்தியாகி, சுற்றியுள்ள கிராமங்களை நோக்கி படையெடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கிராமங்களுக்குள் நுழைந்தால் திரும்பும் இடமெங்கும் ஈக்களின் ஆக்கிரமிப்பை காணமுடிகிறது.
உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் என எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் ஈக்களால் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு உள்ளாவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி இறந்து போன கோழிகளை காலி இடத்தில் போட்டு எரிப்பதாகவும் அதனால் ஏற்படும் துர்நாற்றம் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
ஆலைத் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, ஈக்கள் வீடுகளுக்குள் வருவதைத் தடுக்க பசை தடவப்பட்ட டேப்களை கட்டுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறுகின்றனர்.
ஆனால் அந்த நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை என்று கூறும் கிராம மக்கள், வாரத்தில் ஒருவராவது இந்த சுகாதார சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் நிலையில் உள்ளதாகக் கூறுகின்றனர். இதற்கான தீர்வு வேண்டி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஈக்களை கட்டுப்படுத்த கோழிப்பண்ணையைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும், கோழிகளை திறந்த வெளியில் எரிக்காமல் அதற்கென உள்ள இன்சினிரேட்டர் கருவிகொண்டு எரிக்க வேண்டும், மாவட்ட சுகாதார அதிகாரிகள் அவ்வப்போது வந்து கோழிப்பண்ணையையும் சுற்றியுள்ள கிராமங்களையும் பார்வையிட வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இவை அனைத்தும் கடைபிடிக்கப்படுகிறதா என்று தெரியாத நிலையில், கோழிப்பண்ணையை அங்கிருந்து அகற்றுவது ஒன்றே தங்களுக்கான தீர்வு என்று கூறி கடந்த 24ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்சனை குறித்து அப்பகுதி சார் ஆட்சியர் பிரதாப்பிடம் கேட்டபோது, கோழிப்பண்ணையின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரிக்க இருப்பதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு நோய் பாதிப்புகளில் இருந்து அம்மகளை காக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு....