நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தனது வீட்டைக் காணவில்லை என விவசாயக் கூலித் தொழிலாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கபிலர்மலை ஒன்றியம் இருகூர் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் காங்க்ரீட் வீடு வழங்குமாறு விண்ணப்பித்தார். அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து வீடு அமைப்பதற்கான அடிப்படை பணிகளை செய்ய அவர்கள் உத்தரவிட்டனர். இதனையடுத்து கான்கிரீட் வீடு அமைப்பதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை முருகேசன் மேற்கொண்டார். ஆங்காங்கே கடன் வாங்கி, அஸ்திவாரத்தை போட்டு முடித்தவர் வீடு கட்டுவதற்கான நிதி வரும் எனக் காத்திருந்தார். ஒரு மாதம் மூன்று மாதமாகி, மூன்று மாதம் என்பது 3 ஆண்டுகளாகி, கடந்த 9 ஆண்டுகளாக நீடிக்கிறது முருகேசனின் அந்தக் காத்திருப்பு.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வழக்கம்போல் அதிகாரியைச் சென்று சந்தித்த முருகேசனிடம் அவருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு விட்டதாகவும் இனி நிதி வழங்க இயலாது எனவும் கூறி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த முருகேசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்துக்குச் சென்று அதிகாரிகளால் கட்டிக்கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தனது வீட்டைக் காணவில்லை என்றும் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் புகாரளித்துள்ளார்.
முருகேசனின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து தற்போதைய கபிலர்மலை வட்டாட்சியர் பாலமுருகனிடம் கேட்டபோது, 2010 ஆண்டு வழங்கப்பட்ட தகுதி அட்டை குறித்து அவரது கவனத்திற்கு வரவில்லை எனவும் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
கட்டிடத்துக்கான அடித்தளம் போட்ட கடனைக் கூட இன்னும் முழுமையாக அடைக்க முடியாமல் தவிக்கும் விவசாயி முருகேசன், 9 ஆண்டுகளாக அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதன் பிறகாவது மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.