மதுரையில் ரோபோ செப் (Robo chef) எனும் பெயரில் 800 வகையான உணவுகளை தயாரிக்கும் ரோபோவை மென்பொறியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
சமையலறையில் பெண்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறி வெட்டும் கருவி, இண்டக்ஷன் ஸ்டவ் என பல்வேறு கருவிகள் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப அறிமுகமாகி கொண்டு தான் வருக்கின்றன.
அந்த வகையில் தற்போது புதிதாக வந்துள்ளது ரோபோ செப். மதுரையை சேர்ந்த மென்பொறியாளர் சரவணன் சுந்தரமூர்த்தி என்பவர், ஒரு குழுவை உருவாக்கி கடந்த 6 ஆண்டுகளாக முயற்சித்து இதனை உருவாக்கி உள்ளார்.
சிக்கன் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, சாதம், சாம்பர், ரசம், பால்பாயசம் உள்ளிட்ட உணவுகள் மட்டுமில்லாமல், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து உணவுகளையும் இந்த ரோபோ சமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுகளை எல்லாம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்து, இந்த ரோபோவில் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாக கூறியுள்ள சரவணன், என்ன உணவை தயாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்த பின்பு, அதற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை இந்த ரோபாவில் செலுத்தினால் போதும், வாடிக்கையாளர்கள் விரும்பும் அளவு மற்றும் சுவையில் இந்த ரோபோ உணவை தயாரித்து கொடுத்துவிடும் என்கிறார்.
மதுரை சிக்கன் பிரியாணியின் சுவையை மதுரையில் தயாரித்தால்தான் தரமுடியும் என்பதை இந்த ரோபோ மாற்றுமென்றும், உலகின் எந்த மூலையில் கொண்டு சென்று சமைத்தாலும் அதே சுவையை இந்த ரோபோ செப் கொடுக்கும் என்கிறார் சரவணன் சுந்தர மூர்த்தி.
சமையல் கலைஞரின் தேவைக்காகவே இந்த ரோபோ உருவாக்கப்பட்டதே தவிர, சமையலர்களே இல்லாத நிலையை உருவாக்குவதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்த ஸ்டார்ட்டப் நிறுவனம் என்ற விருதைப் தனது நிறுவனம் பெற்றிருப்பதாகவும், துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உலகளவிலான கண்காட்சியிலும் இடம்பெற்று பலரின் பாராட்டுகளையும் இந்த ரோபோசெஃப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.