சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கல்லூரி செல்லும் வழியில், உளவுப்பிரிவு அதிகாரியின் மகளை காரில் கடத்திய பள்ளி மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஒருதலைக் காதலில் விழுந்த நண்பனுக்காக கடத்தலில் ஈடுபட்ட பள்ளிக்கூட பாய்ஸ்க்கு விழுந்த தர்மஅடி குறித்து விவரிக்கின்றது.
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை அதிவேகமாகச் சென்ற ஹூண்டாய் கார் ஒன்று, சாலையோரப் பள்ளத்தில் சிக்கி நின்றது. அப்போது காரில் இருந்து இளம்பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது.
இதனைக் கண்டதும் அந்த வழியே சென்ற பொதுமக்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தபோது, காருக்குள் 3 இளைஞர்களும் கதறியபடியே தப்பிச் செல்வதற்காக திமிறிக் கொண்டு இளம்பெண் ஒருவரும் இருந்தார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஒன்று கூடி, காரில் இருந்த 3 இளைஞர்களுக்கும் தர்மஅடி கொடுத்து மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.காவல்துறையினரின் விசாரணையில், ஒருதலைக் காதலில் விழுந்த நண்பனுக்கு உதவுவதாக நினைத்து, உளவுப் பிரிவு காவல் அதிகாரியின் மகளை கல்லூரிக்கு செல்லும் வழியில் கடத்திச் சென்று சிக்கிக் கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.
கல்லூரி ஒன்றில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் மதனந்தபுரத்தை சேர்ந்த அரவிந்த்குமார், அதே பகுதியில் இருந்து கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கின்ற, உளவுப் பிரிவு காவல் அதிகாரியின் மகளை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி தன்னைக் காதலிப்பதாக "மனம் கொத்தி பறவை" சினிமா நாயகன் போல நண்பர்களிடம் கதை அளந்து விட்டுள்ளார்.
கல்லூரி நண்பனிடம் காதல் கதையைக் கேட்டு காலத்தையும், நேரத்தையும், படிப்பையும் வீணடித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூட பாய்ஸ் இருவர், அரவிந்த்குமாரின் காதலுக்கு உதவுவதாக வாக்குக் கொடுத்துள்ளனர். அதன்படி, தான் ஒருதலையாகக் காதலிக்கும் அந்த மாணவியை, இந்த இரு கதை கேட்கும் பசங்களை வைத்து தூக்கத் திட்டமிட்டுள்ளான் அரவிந்த்குமார்.
சம்பவத்தன்று அந்த மாணவிக்கு அவர்களது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், அந்த பெண் தான் இல்லையென்றால் செத்து விடுவாள் என்றும் அட்டகத்தி சுற்றிய அரவிந்த்குமார், மாணவியைக் கடத்தும் திட்டத்துடன் இரு பள்ளிக்கூட பசங்களையும் காரில் அழைத்து சென்றுள்ளான். கல்லூரிக்குச் சென்ற பெண்ணை வாயைப் பொத்தி காருக்குள் தூக்கிப்போட்ட பின்னர் தான் தெரிவந்துள்ளது அரவிந்த்குமாரின் காதல் ஒரு தலை ராகம் என்று..!
அந்த பெண் காப்பாற்றச் சொல்லி அலறிய நிலையில், நண்பனுக்காக தூக்கிய பெண்ணை தாலி கட்டிவைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர் அந்த இரு காதல் போராளிகள். ஒரு கட்டத்தில் கடத்திச்சென்ற காரே அவர்களை மக்களிடம் சிக்க வைத்து சின்னாபின்னமாக்கி காவல்துறையின் கரங்களில் சிக்கவைத்துள்ளது.
கடத்தலில் தொடர்புடைய 11 ஆம் வகுப்பு படிக்கின்ற பள்ளிக்கூட சிறுவர்கள் இருவரையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், காவல் அதிகாரியின் மகளைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற அரவிந்தை சிறப்பு விருந்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
நண்பன் சொன்ன காதல் கதையை உண்மை என நம்பி உதவிக்கு செல்வதாக உணர்ச்சிவசப்பட்டால், இறுதியில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாய் மாறி இருக்கின்றது இந்த சம்பவம்..!