அரசியலில் இருப்பவர்கள் எதற்காக சுங்கச்சாவடிகளில் வரி செலுத்த வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சனிக்கிழமையன்று திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி காரில் சென்றுள்ளார். கரூர் மணவாசி சுங்கச்சாவடியை கார் அடைந்த போது அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
அதற்கு தான் முன்னாள் எம்எல்ஏ என்று கூறி அடையாள அட்டையை காட்டி தன்னை இலவசமாக அனுமதிக்குமாறு பாலபாரதி கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமே கட்டணம் இலவசம் என்றும், முன்னாள் எம்எல்ஏக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
தான் இதற்கு முன்பு வந்த சுங்கச்சாவடிகளில் எல்லாம் கட்டணம் செலுத்தாமல் வந்துள்ளதாகவும் அங்கெல்லாம் தன்னை இலவசமாக அனுமதித்துள்ள நிலையில், மணவாசி சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் கேட்பது ஏன் என்றும் பாலபாரதி கேள்வி எழுப்பியதாக சொல்கிறார்கள்.
45 ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து, 45 நிமிடத்துக்கு மேல் வாக்குவாதம் செய்துவிட்டு கடைசியில் தங்கள் கட்சியின் மாவட்ட செயலாளரை வரவைத்து பேசி கட்டணம் செலுத்தாமலேயே சென்றதாக அவர் மீது புகார் எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, பாஸ்டேக் முறையில் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய இடத்தில் 60 ரூபாய் கேட்பதாகவும் தாம் அரசியலில் இருப்பதால் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசியல் வாதிகள் போலவே அவர்களுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கும் சுங்க கட்டணம் கிடையாது என்று சலுகை வழங்க எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவராவது குரல் கொடுப்பார்களா ? என்பதே சுங்கசாவடியில் மணி கணக்கில் காத்திருந்திருந்து உரிய பணத்தை செலுத்தி வரும் வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது.