சென்னை மெரினா கடற்கரையில் காணும் பொங்கலையொட்டி ஐயாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெசனட் நகர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொழுபோக்கு இடங்களிலும் மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
பொங்கல் திருநாள் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் சென்னையில் உள்ள பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள். சென்னையில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவது என்பது பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது என்பதாக அமைந்துவிடுகிறது.
குறிப்பாக காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கனோர் ஒன்று கூடுவார்கள். இம்முறை உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை ஆகிய இரு இடங்களிலும் தலா ஒரு தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் காண்காணிக்கப்படுகிறது. மெரினா உட்புறச்சாலையில் 11 இடங்களில் காவல் உதவி மையங்களும், 7 ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு மீட்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மணற்பரப்பில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணிக்க தனிக்குழுவும் தயார் நிலையில் உள்ளனர். 3 ஆளில்லா குட்டி விமானம் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் என்பதால் கடலில் யாரும் இறங்காமல் இருக்க தடுப்பு வேலிகளை அமைக்கப்பட்டு 16 குதிரை படைகளும், 7 மணலில் செல்லும் டெரைன் வாகனம் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்க ஏதுவாக பெற்றோரின் செல்போன் எண் எழுதிய காவல் காப்பு எனும் அட்டையை காவலர்கள் குழந்தைகளுக்கு அணிவிப்பார்கள். அதில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதே போன்று பெசண்ட் நகர், திருவான்மியூர், கோவளம் கடற்கரையிலும், கிண்டி சிறுவர் பூங்கா,வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடல் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.