சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையில் 3 பக்க கடிதத்தை கைப்பற்றிய போலீசார் காதல் தோல்வியால் இந்த முடிவை மேற்கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தை அடுத்த கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைகழகத்தில், நிவேதா என்ற மாணவி தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார்.
அவருடன் தங்கி இருந்த இரு மாணவிகள் பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் தனியாக இருந்த மாணவி நிவேதாவின் அறை கடந்த 10 ந் தேதி முதல் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
நேற்று மதியம் பக்கத்து அறையில் தங்கியுள்ள மாணவிகள் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே நிவேதா மின் விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.
தகவல் அறிந்து வந்த கருப்பூர் போலீசார், அறை கதவை உடைத்து திறந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் அறையில் போலீசார் சோதனையிட்டதில், 3 பக்க கடிதம், டைரி மற்றும் காதல் சின்னத்துடன் கூடிய பொருட்கள் சிக்கின. எனவே காதல் தோல்வியால் மாணவி தற்கொலையா அல்லது வேறு காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மாணவி தற்கொலையால், மற்ற மாணவிகளும், மாணவர்களும் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விடுதிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு 400 க்கும் மேற்பட்ட மாணவிகள் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றனர்.