ட்ரூ காலர் (True caller) மூலம் பெண்கள் நம்பரை எடுத்து, அவர்களிடம் அன்பாக பேசி காதல் வலையில் சிக்கவைத்து, பின்பு தனது சித்து விளையாட்டை காட்டியவன் போலீசாரிடம் சிக்கியுள்ளான்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு,கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய செல்போன் எண்ணில் இருந்து காதல் குறுஞ்சய்திகள் வந்துள்ளன.
அதனை அந்த பெண் பெரிதாக பொருட்படுத்தாததால், தொடர்ந்து அந்த பெண்ணுக்கு காதல் குறித்த குறுஞ்செய்திகள் அந்த எண்ணில் இருந்து வந்துள்ளன. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி அந்த செல்போன் எண்ணை தொடர்புக்கொண்டு தனக்கு இன்னும் சிறிது காலத்தில் திருமணமாக போகிறது, ஆகையால் இதைப்போன்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த எண்ணில் இருந்து குறுஞ்செய்திகள் வருவது நின்று, ஆபாச படங்கள் வர தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தரப்பில் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை தொடர்ந்து அந்த எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த எண் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் முல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து வினோத் குறித்த தகவல்களை சேகரித்த போலீசார், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மும்மூர்த்தி நகரில் அவன் இருப்பதை கண்டறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
குத்துமதிப்பாக 10 இலக்க மொபைல் எண்களை ட்ரூ காலரில் (true caller) பதிவிடும் வினோத், அதில் பெண்கள் பெயர் எதுவும் வந்தால் உடனடியாக போனில் அந்த எண்ணை சேமித்து வைத்துக் கொண்டு அவர்களை காதல் வலையில் விழவைப்பதையே வேலையாக இருந்துள்ளான்.
அப்படி வலையில் விழும் பெண்ககளுக்கு ஆபாசமான படங்கள், செய்திகள் ஆகியவற்றை பகிர்வது, அது குறித்து அவர்களிடம் உரையாடுவது என அவனுக்கு தெரிந்த சித்து விளையாட்டுகளை காண்பித்து வந்துள்ளதோடு, அவனிடம் நெருங்கி பழகும் பெண்களை நேரில் வரவழைத்து அவனது பாலியல் இச்சைக்கு இரை ஆக்கியதாகவும் கூறப்படுகிறது.
இவனால் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் போலீசார், முன்பின் தெரியாத நபரிடம் குறுஞ்செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோக்களோ வந்தால் தயங்காமல் அந்த எண்ணை பெண்கள் ப்ளாக் செய்ய வேண்டுமென போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.