விழுப்புரத்தில் தர்பார் திரையரங்கில் படம்பார்த்துவிட்டு வந்த ரசிகர்களுக்கு இலவச கரும்பு மற்றும் விதை பந்துகள் வழங்கப்பட்டபோது கரும்புகளை திருடிச்செல்ல முனறவர்களை மடக்கி பிடித்த ரஜினி மன்றத்தினர் கரும்பால் அடித்து விரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தர்பார் படத்தில் ரவுடிகளை திரையில் துவம்சம் செய்து விட்டு ஸ்டைலாக அமர்ந்துள்ள ரஜினியை பார்த்து விட்டு உற்சாகமாக வெளியேவந்த ரசிகர்கள் வைத்த தர்பார் பொங்கல் தான் இந்த காட்சிகள்..!
விழுப்புரம் கல்யாண் திரையரங்கில் தர்பார் படத்தை காணவந்த ரசிகர்களுக்கு ரஜினி மன்றத்தின் சார்பில் இரண்டு கரும்புகளும், மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக விதை பந்துகளும் வழங்கப்பட்டன.
நேரம் செல்ல செல்ல கூட்டம் முண்டியடித்த நிலையில் கூட்டத்திற்குள் புகுந்த சிலர் கரும்புகளை கட்டாக திருடிச்செல்ல முயன்றனர். இதனால் அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் சம்பந்தபட்ட நபரை பிடித்து இழுத்து வெளியே அழைத்து சென்றனர்.
அந்த நபருடன் வந்த மேலும் சிலர் பிரச்சனை செய்த நிலையில் ரசிகர்களுடன் மோதல் ஏற்பட்டது. அதில் ஒருவரை இழுத்துச்சென்று கையால் கும்மாங்குத்து குத்தியதுடன், இலவசமாக கொடுக்கப்பட்ட கரும்பால் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இளம் தலைமுறை என கூறிக்கொள்ளும் அஜீத் விஜய் ரசிகர்கள் தான் தங்கள் அபிமான நடிகர்கள் படங்கள் வெளியாகும் நேரத்தில் திரையில் நடக்கும் தகராறை நிஜத்தில் நடத்திக் காட்டுவது வழக்கம்.
அவர்களுக்கு தாங்கள் கொஞ்சமும் குறைவில்லை என்பதை விழுப்புரம் ரஜினி ரசிகர்கள் இந்த அடி தடி மூலம் நிரூபித்து உள்ளனர் என்பதே கசப்பான உண்மை..!