தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மீது ஏறி டிக்டாக் வீடியோ பதிவு செய்த இளைஞர்களுக்கு போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று போலீசார் அளித்த தண்டனை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
தூத்துக்குடியில் ஆயுதப்படை வளாகம் முன்பு நிறுத்தியிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி இளைஞர்கள் 3 பேர், சினிமா பாடல் ஒன்றுக்கு டிக் டாக் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து காவல்துறை வாகனத்தில் ஏறி டிக்டாக் வீடியோ பதிவு செய்த இளைஞர்கள் குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியாக அவர்கள் முனியசாமிபுரம் மற்றும் லெவஞ்சிபுரத்தை சேர்ந்த ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் பிடித்து தென்பாகம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் எஸ்.பி. ராஜாமணி, இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில் நின்று எட்டுமணி நேரம் போக்குவரத்தை சரி செய்யவேண்டும் என்று தண்டனையும் அளித்தனர். போலீசார் அறிவுரையை ஏற்று இளைஞர்கள் 3 பேரும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்குடனும் காவல்துறை பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காகவும் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.