சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒன்றிய கவுன்சிலராக நின்று வெற்றி பெற்ற பெண் அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கும் நிலையில், அவரை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக காங்கிரஸ் பிரமுகரான அவரது கணவர் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மைக் செட் வைத்து கதறிக்கொண்டிருக்கிறார்,
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் திங்கட்கிழமை அந்தந்த மாவட்டங்களில் பதவியேற்றுக் கொண்டனர்.
ஒன்றிய சேர்மன், மாவட்ட சேர்மன் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பதவிகளைக் கைப்பற்றுவதற்காக மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை அழைத்துச் செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக கங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தேவி மீனாள் வெற்றி பெற்றார். தேவி மீனாளை எதிர்கட்சியினர் கடத்திச் சென்றுவிட்டதாகவும் தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும் கூறி அவரது கணவரும் ஓய்வுபெற்ற வட்டாட்சியருமான மகேந்திரன் கூறி வருகிறார். மனைவியை காணவில்லை என காவல் நிலையம் சென்று புகாரளிக்காமல், தனது வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு ஒலிப்பெருக்கி வழியே அவர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு கூறி வருகிறார்.
இந்த நிலையில் உறவினர் வீட்டில் தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேவி மீனாள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குதிரை பேரத்துக்கான மகேந்திரன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகக் கூறும் போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.