உலககோப்பை கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஆட்டோ ஓட்டுனரின் மகளான காசிமாவுக்கு முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கி பாராட்டினார்.
புது வண்ணாரப்பேட்டையில் வாடகை ஆட்டோ ஓட்டுநர் மேஹ்பூப் பாஷாவின் இளைய மகள் காசிமா பொருளாதார நெருக்கடியையும் கடந்து பல இன்னல்களுக்கு இடையே பயிற்சி செய்து கேரம் உலகச் சாம்பியன் ஆக மாறி இருக்கிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 6வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் காசிமா, மகளிர் பிரிவில் தனிநபர், இரட்டையர், குழு உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கங்களை வென்று சாம்பியன் ஆனார். கேரம் உலக சாம்பியன் காசிமாவிற்கு தமிழக அரசு ஒரு கோடி நிதி வழங்கி சிறப்பித்தது.
புதிய வண்ணாரப்பேட்டையின் ஒரு சிறிய தெரு பகுதியில் வெறும் நான்கு சுவர்கள் கொண்ட பகுதி தான் காசிமாவின் பயிற்சி பட்டறை. காசிமாவின் தாத்தா காலத்தில் இருந்து கேரம் போர்டு விளையாடும் பழக்கம் அவர்களது குடும்பத்தினருக்கு இருந்துள்ளது. காசிமாவின் அண்ணன் அப்துல் ரகுமான் சிறப்பாக கேரம் விளையாடி தேசிய அளவிலான சப் ஜூனியர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார் அவருக்கு எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்லும் போது அதனை வேடிக்கை பார்த்த காசிமாவிற்கு கேரம் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
அது போட்டிகளில் வெற்றியை அவருக்கு கொடுக்க மாவட்ட அளவில் மாநில அளவில் தேசிய அளவில் என தற்போது உலக அளவில் சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார்.
ஒவ்வொரு முறை விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்லும் போதும் கடன் வாங்கிக் கொண்டுதான் செல்வோம் எங்களின் குடும்ப பொருளாதார நிலை மிகவும் மோசமாகத்தான் இருக்கும்.ஆனால் கேரம் போர்டு விளையாடினால் வாழ்க்கை மாறுமென நம்பினோம். தற்போது பெற்ற வெற்றிக்குப் பிறகு எல்லாம் லேசாக மாறிவிட்டது எங்களது துன்பங்கள் எல்லாம் மறைய தொடங்கி விட்டன என காசிமா தெரிவித்தார்.
எங்களது தாத்தா, அப்பா யாரும் சொந்த வீட்டில் வசித்தது கிடையாது.
முதல்முறையாக நாங்கள் சொந்த வீடு வாங்கிய அப்பா அம்மாவிற்கு கொடுக்கப் போகிறோம் என்றார் மகிழ்ச்சியாக