சம்பவம் நடந்து 4 நாட்கள் கடந்தும் துப்பு துலங்காததால் மகனை இழந்து தவிக்கும் தாய் ஒரு புறம்.. கொலையாளியை கண்டு பிடிக்க கொட்டும் மழையிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் மறுபுறம்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன் - பாலசுந்தரி தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி, சின்னம்மை நோய் பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மாயமானான். நீண்ட தேடுதலுக்கு பின்னர் எதிர்வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டான்.
கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயும் தந்தையும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்ததாகவும், குழந்தை பிறந்த பின்னர் குடும்பத்தினர் உடன் பேசிக் கொண்டதாக கூறப்படுகின்றது. கொலையான அன்று அட்டை கம்பெனிக்கு வேலைக்கு சென்ற தாய், வீட்டில் தனது மகன் தனியாக இருக்கிறான் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று செல்போன் மூலம் மாமியாருக்கு தகவல் சொல்லி சென்றதும் , பாட்டி வருவதற்குள்ளாக பேரன் மாயமாகி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தன்று மதியம் 3 மணிக்கு மேல் சிறுவன் இறந்திருக்க வேண்டும் என பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சிசிடிவிகளை ஆய்வு செய்ததில் அச்சிறுவன், வசித்து வந்த 2 தெருக்களை தாண்டி போகவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவன் காணாமல் போன உடனேயே இரண்டு தெருவில் உள்ள 80 வீடுகளில் போலீசார் தேடும் பணிகளை மேற்கொண்டிருந்தால் சிறுவனை கண்டுபிடித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்க்கிடையே கடுமையான மன அழுத்தத்துக்குள்ளானதாக கூறி சிறுவன் தாய் பாலசுந்தரி, தாத்தா கருத்தபாண்டி, பாட்டி கோட்டை தாயி ஆகியோர் போலீஸ் முன்னிலையில் பூச்சிக் கொல்லி மருந்து குடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனை உடனடியாக போலீசார் தடுத்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர், தனது மகனின் பள்ளிப்பையை கட்டிப்பிடித்துக் கொண்டு தாய் பாலசுந்தரி கதறி அழுதார்
சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் சரவண பெருமாள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் மற்றும் மோப்ப நாய் சோதனையால் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கொலையாளியை கண்டறிவதில் சுனக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், பழைய துப்பறியும் முறையில் இந்த கொலை வழக்கு விசாரணையை தனிப்படை போலீசார் முன்னெடுத்து இருப்பதாக தெரிவித்தனர்.