தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வரும் நிலையில், பைக் டாக்ஸிகளுக்கான தேவை குறித்து பொதுமக்கள் கூறுவது என்ன ? பைக் டாக்ஸி தமிழக அரசால் அங்கீகரிக்கப்படுமா? தடை விதிக்கப்படுமா? என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்
பெருகி வரும் போக்குவரத்து நெரிசல், மக்களுக்கான போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பைக் டாக்ஸிகளுக்கு நகர் பகுதிகளில் மக்களிடையே வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
செலவு, நேர விரையம் ஆகியவற்றை குறைக்க பெரும்பாலானோர் அலுவல் நேரங்களில் ரேபிடோ, ஓலா, ஊபேர் போன்ற நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளை தான் நாடுகின்றனர்.
பைக் டாக்ஸி வரவால் எங்களது வருமானம் குறைவதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத பயணம் என்ற காரணத்தைக் கூறி வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பைக் டாக்ஸிகளுக்கு எதிராக சென்னை, கோவை என பல்வேறு இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேபிடோ ஓட்டுநரை மூன்று ஆட்டோ ஓட்டுநர்ள் சேர்ந்து தாக்கியாக கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போக்குவரத்து துறை ஆணையர் , வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். இதனால் தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்தது
விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பைக் டாக்ஸி ஓட்டுநருக்கு கூட இழப்பீடு கிடைக்க மோட்டர் வாகனச் சட்டத்தில் வகையில்லை என்பதால் தான் பைக் டாக்ஸிகளை இயக்குவது சட்டப்படி அனுமதிக்க முடியாது என்கின்றனர் போக்குவரத்து துறை அதிகாரிகள்.
இது குறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பைக் டாக்ஸிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், பறிமுதல் செய்யப்படாது எனவும், அதேவேளையில் பைக் டாக்ஸியில் பயணிப்பவர்களுக்கு விபத்து நேரிட்டால் காப்பீடு கிடைப்பதில்லை என்பதால் அவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு பரிசீலித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பயன்பாட்டாளர்கள் மத்தியில் பைக் டாக்ஸிகளுக்கு பெரும் ஆதரவு இருப்பதால் ஹரியானா, பஞ்சாப், ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டது போல், தமிழகத்திலும் காப்பீடு கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.