சென்னை தியாகராய நகரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி ஓட்டலில் பரிமாறப்பட்ட பிரியாணி மற்றும் கிரில் சிக்கனில் புழு இருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள் கடையை பூட்டிச்சென்றனர்.
வயிற்று பசிக்கு ஆசை ஆசையாய் வாங்கிய பிரியாணியில் புழு கிடந்ததால் அதனை சாப்பிட்ட இயலாமல் ஒட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த காட்சிகள் தான் இவை..!
சென்னை தியாகராய நகர், பிருந்தாவன் வீதியில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சாப்பிட சென்ற சத்யா பிரகாஷ், நிபி நெல்சன் ஆகியோர் பிரியாணியும் , கிரில் சிக்கனும் ஆர்டர் செய்துள்ளனர். அவர்களுக்கு பரிமாறப்பட்ட பிரியாணி மற்றும் கிரில் சிக்கனில் புழு செத்து இருந்ததாக கூறி இருவரும் ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த இரு திரு நங்கைகளும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்
இதனால் சாப்பிட்ட வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் அப்படியே வைத்து விட்டு எழுந்து வெளியே சென்றனர்
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வரும் வரை யாரும் வெளியே செல்லக்கூடாது என்று ஓட்டல் ஊழியர்களை மறித்து வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.
அதற்குள்ளான சதாசிவம் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலில் நுழைந்து அங்குள்ள உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். பிரியாணி மற்றும் கிரில் சிக்கனை 10 டப்பாக்களில் சேகரித்து கட்டைப்பையில் வைத்து ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்
போலீசார் , செய்தியாளர்களை படம் பிடிக்க விடாமல் தடுத்து நின்றனர். ஓட்டலில் ஆய்வு செய்து முடித்து வெளியே வந்த அதிகாரிகள் , ஓட்டலை மூடுவதற்கு நோட்டீஸ் கொடுத்து இருப்பதாகவும், ஓட்டலில் உள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்து , தங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே மீண்டும் திறக்க சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தனர்
ஓட்டலை படம் பிடிக்க விடாமல் போலீசார் விரட்டி விடுவதிலேயே குறியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டல் ஊழியர்கள் ஏதாவது செய்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் மிரட்டினர்.
அதே நேரத்தில் தட்டில் இருந்தது கத்தரிக்காயில் இருந்த புழு என்றும் தவறுதலாக வந்து விட்டதாகவும் ஓட்டல் தரப்பில் அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.