சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வசூலில் பெரும் சரிவான தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்ததே படத்தின் வசூல் பாதிக்க காரணம் எனத்தெரிவித்தார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.
விமர்சனம் என்ற பெயரில் அந்தப் படத்தின் இயக்குனர் நடிகர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அனைத்து திரையரங்குகளும் இதனை பின்பற்ற வேண்டும் என தான் தெரிவித்த கருத்துக்கு பல தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்திருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்
படத்தை இணையதளங்களில் வெளியிடக் கூடாது என நீதிமன்ற தடை பெறும் தயாரிப்பாளர்கள், அதே போல படம் வெளியான முதல் 7 நாட்களுக்கு விமர்சனம் செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் அப்போதுதான் பொதுமக்களாக வந்து படங்களை பார்த்து நல்ல படங்களை ஓட வைப்பார்கள் என்றார் திருப்பூர் சுப்பிரமணியம்
இதற்க்கிடையே திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்த இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர் வினையாற்றி உள்ள சினிமா ரசிகர்கள், திரையரங்கில் விற்கப்படும் பாப்கார்ன் விலை, பார்க்கிங் கட்டணம் எல்லாம் எப்படி உங்கள் விருப்பம் போல நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அதே போல படம் பார்த்து கருத்தை தெரிவிப்பது அவர்களது விருப்பம் என்று கூறி வருகின்றனர்.