சென்னை மண்ணடியில், குண்டும் குழியுமாக கிடந்த சாலையை கடந்த 2 மாதமாக கண்டு கொள்ளப்படாத நிலையில், மழை பெய்து தண்ணீர் தேங்கிய நிலையில் இரவோடு இரவாக தரமற்ற தார்ச் சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையில் விஞ்ஞான முறையில் தார்ச்சாலை அமைக்கும் காட்சிகள் தான் இவை..!
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட மண்ணடி தெருக்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக அப்பகுதி வியாபாரிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாநகராட்சி அதிகாரியிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனு அளித்ததாக கூறப்படுகின்றது.
அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் புதன்கிழமை பெய்த மழையில் அந்த தெருக்களில் மழை நீர் தேங்கியது. அந்த நீர் வடியாத நிலையில் இரவோடு இரவாக அதிகாரிகள் உத்தரவின் பேரில் தண்ணீருக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது
தண்ணீர் மேல் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனையும் மீறி சாலை அமைத்த நிலையில், காலையில் அந்தப்பகுதி மக்கள் தரமற்ற சாலைப்பணியை கண்டித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்
தண்ணீருக்கு மேல் போடப்பட்டதால் காலால் உரசினாலே தார் சாலை பெயர்ந்து வருவதாக புகார் தெரிவித்த மக்கள் , உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.