அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் , எந்த நிகழ்ச்சிக்கும் வெளியே தலைகாட்டாத நடிகர் விஜய் முதன் முறையாக நேரில் சென்று தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தனது கொள்கை குறித்து இன்னும் அறிவிக்காத நிலையில், இது அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, கொடியை அறிமுகப்படுத்தியுள்ள நடிகர் விஜய் இன்னும் சில மாதங்களில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழு நேர அரசியலிலில் குதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கட்சியின் கொள்கை என்ன? செயல் திட்டம் என்ன? என அரசியல் களத்தில் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்த நிலையில், மாலையையும், உதிரிப்பூக்களையும் தானே கையில் எடுத்து வந்த விஜய் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். கட்சி தொடங்கிய பின் தானே நேரில் சென்று ஒரு தலைவரின் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்துவது இதுவே முதல்முறை.
சிம்பிளாக ஷிப்ட் காரில் வந்த விஜய், செருப்பு அணியாமல் வெறுங்காலில் சென்று பெரியாரின் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி, கையெடுத்து கும்பிட்டு மரியாதை செலுத்தினார்.
அப்போது பெரியார் திடலில் இருந்த திமுக நிர்வாகிகள், நடிகர் விஜயுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதற்கு முன்பு விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும், அதுவே தமிழக வெற்றிக்கழகமாக மாறிய போதும், அவரது ஆல் இன் ஆல் ஆன புஸ்ஸி ஆனந்த் தான் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளை கொண்டாடியது வழக்கம். ஆனால், இப்போது நேரடியாக விஜயே களமிறங்கியுள்ளது பிற அரசியல் கட்சிகளுக்கு பெரிய மெசேஜ் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், அதே கையோடு பெரியாரின் பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளதை, தமிழ்நாட்டில் பெரியாரை தவிர்த்துவிட்டு யாராலும் அரசியல் பண்ண முடியாது என திராவிட ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.
ஆனால், அண்மையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்லாத நிலையில், ஓணம் பண்டிகைக்கு மட்டும் முண்டியடித்துக்கொண்டு வாழ்த்து சொன்னது ஏன்? என தமிழிசை உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனது கட்சி கொடி பாடலில், மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருடன் தன்னை காட்சிப்படுத்திய விஜய் இப்போது பெரியார் நினைவிடத்தில் முதன் முறையாக நேரில் சென்று மரியாதை செலுத்தியதன் மூலம் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது...