சென்னையில் சட்டவிரோதமாக செயல்படும் மசாஜ் சென்டர்களுக்குள் புகுந்து நகைப்பணம் பறித்ததாக இருவரை கைது செய்த காவல்துறையினர், போலீஸ் இன்பார்மர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர்
சென்னை கேகே நகரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் கடந்த 25 ஆம் தேதி மாலை மசாஜ் செய்து கொள்ள முககவசம் அணிந்தபடி சென்ற நான்கு நபர்கள் சென்றுள்ளனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அங்கிருந்த பெண் ஊழியர்களின் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் ஐபோன் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேகே நகர் காவல் நிலைய போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து திருவெற்றியூரை சேர்ந்த ஜெயசீலன், நொச்சி குப்பதை சேர்ந்த பழனிசாமி ஆகிய இருவரை கைது செய்தனர். விசாராணையில் அந்த மசாஜ் செண்டருக்கு முறையான உரிமம் இல்லை என்று போலீஸ் இன்பார்மர் ஐஸ் அவுஸ் ராஜீ கொடுத்த தகவலின் பேரில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
வடமாநில பெண்கள் நகை அணிந்து இருக்கமாட்டார்கள் என்பதால், தமிழகத்தை சேர்ந்த பெண்கள் வேலை செய்யும் மசாஜ் சென்டர்களை குறிவைத்து அவர்களுடன் வீடியோ காலில் பேசி அவர்கள் நகை அணிந்து உள்ளார்களா ? என்பதை உறுதிப்படுத்தி கைவரிசை காட்டியதாக ஜெயசீலன் போலீசில் தெரிவித்துள்ளான்.
மசாஜ் சென்டர்கள் சட்டவிரோதமாக செயல்படுவதால் புகார் அளிக்கமாட்டார்கள் என போலீஸ் இன்பார்மராக உள்ள ராஜீ கொடுத்த ஐடியாபடி கொள்ளையடித்ததாக கூறப்படுகின்றது.