பாலக்காட்டில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஐ.டி பெண் ஊழியரை கழிவறையில் தள்ளி, இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலக்காட்டில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்., ஐ.டி. நிறுவனத்தில் பணி புரியும் கரூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் S 9 பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
அந்த விரைவு ரயில் 26 ம் தேதி அதிகாலை 2 மணியளவில், காட்பாடி ரயில் நிலையத்தை நெருங்கி உள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஐ.டி. பெண் ஊழியரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடியதாக கூறப்படுகின்றது.
அந்த நபரை பெண் விரட்டிச்சென்ற நிலையில் தயாராக கழிப்பறை கதவை திறந்து வைத்திருந்த ஒரு நபர், அந்த இளம் பெண்ணை உள்ளே இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. அந்த நபரை தொடர்ந்து செல்போனை பறித்துச்சென்ற நபரும் கழிவறைக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு ஓடும் ரெயிலில் இருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ரயில்வே எஸ்.பி., ஈஸ்வரன் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவலின் மூலம் சந்தேக நபரின் அடையாளங்களை வைத்து நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.