சென்னை வியாசர்பாடியில் 40 ஆயிரம் கடனுக்காக 8 ஆம் வகுப்பு படித்து வந்த மகளை தாய் அடமானம் வைத்த நிலையில், சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பெண் பைனான்சியர் உள்ளிட்ட 6 பேர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை, எம்.கே. பி நகர் காவல் நிலையத்திற்கு தனியாக சென்ற 16 வயது சிறுமி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். வியாசர்பாடியை சேர்ந்த முத்துலெட்சுமி என்ற பெண் பைனான்ஸியரிடம், தனது தாய் பெற்ற 40 ஆயிரம் ரூபாய் கடனுக்கு பதிலாக கடந்த 2020 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்து வந்த தன்னை , அடமானமாக அனுப்பி வைத்ததாகவும், அவர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முத்துலெட்சுமியை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. முத்து லெட்சுமிக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் நிஷாந்த், உறவினர் ஸ்பீடு அஜீத் ஆகியோர் போதை பொருளை கொடுத்து சிறுமியை மயக்கமடைய செய்து பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்தது. சிறுமியை காப்பாற்றுவதாக உறுதி அளித்து நெருங்கி பழகி காதலித்த கிஷோர் என்ற இளைஞரும், அவரது நண்பருமான மகேஸ்வரனும் தங்கள் பங்கிற்கு சிறுமியை சீரழித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நிஷாந்த், ஸ்பீடு அஜீத், கிஷோர் , மகேஸ்வரன்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி முத்து லெட்சுமியிடம் இருக்கும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சிறுமியின் தாய்க்கு 500 ரூபாய் பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. உடல் நிலைபாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பிய சிறுமி தாயை தேடி சென்றதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்ட தாய் , மறுபடியும் சிறுமியை முத்து லெட்சுமியிடம் ஒப்படைத்து தவறான வழியில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி கடந்த 8 மாதங்களாக தனது சகோதரன் உடன் மணலி புது நகரில் பாதுகாப்பாக வசித்து வந்த நிலையில், அவர் இருக்கும் இடத்துக்கு சென்ற தாய் மீண்டும் அவரை , தவறான செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தியது தெரியவந்ததால், தாயையும் போலீசார் கைது செய்தனர். மொத்தமாக இதுவரை 6 பேரை போக்சோ வழக்கில் கைது செய்துள்ள போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலை வைத்து ஒவ்வொருவராக கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.