திருப்பத்தூரில் பெண்ணின் காரை ஏமாற்றி விற்ற வழக்கில் கைதான இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, பாதுகாப்பு காவலரிடம் வம்பிழுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தனது கட்சிக்காரர்களுக்காக நீதிமன்ற வளாகத்தில் வைத்து போலீசாரிடம் சத்தம் போட்டு சட்டம் சொன்ன வழக்கறிஞர் சுரேஷ் இவர் தான்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான காரை 3 லட்சம் ரூபாய்க்கு விற்று மோசடி செய்ததாக கமலக்கண்ணன், பெரோஸ் கான் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களை ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றம் அழைத்து வந்திருந்தனர்.
அப்போது அவர்களிடம் பேச்சுக்கொடுத்த வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் இருவரில் யார் தப்பு செய்தது ? என்று சின்சியராக கேட்டுக் கொண்டிருந்தார்
இதனை பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர் ஒருவர், பேசக்கூடாது என்று சொன்னதால் உக்கிரமான வழக்கறிஞர் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
உடன் வந்த போலீசார் சமாதானம் செய்த போதும் அடங்க மறுத்த சுரேஷ் தனது குரலை உயர்த்தி சத்தம் போட்டார். கோர்ட்டில் இப்படி தான் பேசுவேன் என்று அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்
இதையடுத்து காவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் சுரேஷ் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாச வார்த்தையால் திட்டுவது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் திருப்பத்தூர் நகர போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.