சென்னை எம்.ஜி.ஆர் நகரில் சுருக்குப்பையில் மூதாட்டி வைத்திருந்த பணத்திற்காக அவரை அடித்துக் கொலை செய்து கணவனோடு சேர்ந்து மூட்டைக் கட்டி சடலத்தை ஆற்றில் வீசியதோடு, மூதாட்டியை தேடும் பணியிலும் சீரியஸாக ஈடுபட்ட கில்லர் தம்பதி சிக்கியதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பக்கத்து வீட்டு மூதாட்டியை கொலை செய்து நகை பணத்தை கொள்ளை அடித்ததாக கைதான பார்த்திபன்-சங்கீதா தம்பதியர் தான் இவர்கள்.
சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த 78 வயதான விஜயாவை கடந்த 17-ம் தேதி முதல் காணவில்லை என போலீஸில் புகார் அளித்தார் அவரது மகள் லோகநாயகி. சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் விஜயாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பார்த்திபன்- சங்கீதா தம்பதியர் மீது போலீஸாரின் சந்தேக பார்வை திரும்பியது.
விஜயாவின் செல்ஃபோனும், பார்த்திபனின் செல்ஃபோன்னும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததும், பார்த்திபன் மீது கத்தியைக் காட்டி மிரட்டி 5 சவரன் நகை பறித்த வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. எனவே, பார்த்திபனை விசாரணைக்காக தேடிய போது குடும்பத்தோடு தலைமறைவானது தெரிய வந்தது.
விருதுநகரில் பதுங்கியிருந்த தம்பதியரை கைது செய்து விசாரணை நடத்திய போலீஸார், அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இடமான சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை அருகே கால்வாயில் மூட்டையில் கட்டி வீசப்பட்ட சடலத்தை கைப்பற்றினர்.
விஜயாவை எதற்காக கொலை செய்தீர்கள் என போலீஸார் விசாரித்த போது, சங்கீதாவிற்கு விஜயாவின் மகள் லோகநாயகி கடனாக கொடுத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை திருப்பி கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் வேலைக்குச் சென்றதால் விஜயா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துக் கொண்டு அங்குச் சென்றுள்ளார் சங்கீதா. அப்போது, விஜயா பணம் வைத்திருக்கும் சுருக்குப் பை கீழே கிடந்ததை கவனித்த சங்கீதா அதனை எடுத்துள்ளார். இதனை கவனித்து விட்ட விஜயா, தன்னிடம் சுருக்குப்பையை கொடுத்து விடுமாறு சத்தமிட்டதால் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து விஜயாவின் தலையில் பலமாக அடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார் சங்கீதா.
மயங்கி கீழே விழுந்த விஜயாவின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு தனது கணவர் பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்துள்ளார் சங்கீதா. உடனடியாக வீடு திரும்பிய பார்த்திபன், விஜயா அணிந்திருந்த 3 சவரன் நகை மற்றும் வீட்டிலிருந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சடலத்தை தங்கள் வீட்டிற்கு தூக்கி சென்றுள்ளார்.
குப்பையை வெளியே கொட்ட வேண்டுமெனக் கூறி லோகநாயகியிடமிருந்தே ஒரு பெரிய கோணிப்பையை சங்கீதா வாங்கி வர அதிலேயே சடலத்தை மறைத்து மொபட்டில் எடுத்துச் சென்று கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார் சங்கீதா.
அதே நேரத்தில், விஜயாவை அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கியதில் இருந்து, காணவில்லை என போஸ்டர் ஒட்டியது வரையில் கூடவே இருந்து தங்கள் மீது சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டனர் பார்த்திபன்-சங்கீதா ஜோடியினர்.
அண்டை வீட்டாராக இருந்தாலும் பழக்கவழக்கம் ஒரு வரையறைக்குள் இருப்பதே நல்லது எனத் தெரிவித்தனர் போலீஸார்.