ரவுடி ஆற்காடு சுரேஷின்கொலைக்கு பழிவாங்கும் விதமாக, அவரது பிறந்தநாள் அன்றே ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தான் பி.எஸ்.பி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள். வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையிலான போலீசாரின் விசாரணையில், கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன்படி, ஆற்காடு சுரேஷுக்கும், ஆம்ஸ்ட்ராங் இடையேயான பழிக்குப்பழி வெறிதான் கொலைக்கு காரணம் என்கிறது காவல்துறை.
வடசென்னை புளியந்தோப்பு ஏரியாவில், ஆம்ஸ்ட்ராங்கும், அவரது பகையாளி எனக்கூறப்படும் ஆற்காடு சுரேஷும் சக்தி வாய்ந்தவர்களாக வலம் வந்த நிலையில், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றாலும், சுரேஷின் கொலையின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருக்கிறார் என்றும், பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட வேண்டும் எனவும் சுரேஷ் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுவும், சுரேஷின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்குள் ஆம்ஸ்டிராங்கை தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக கைதாகியுள்ள சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திட்டமிட்டபடி, சரியாக ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்றே ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாகவும் பொன்னை பாலு கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டியதால் தனது மனைவி பயத்தில் பிரிந்து சென்று விட்டதாக தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. அண்ணனும் இல்லை மனைவியும் இல்லை என்பதால், சபதம் போட்டு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியதாக பாலு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தாகக் கூறப்படுகிறது.
பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல கடந்த ஒரு வார காலமாக நோட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டு கட்டுமான பணி நடக்கும் இடத்தில் நின்று ஆம்ஸ்ட்ராங் பேசிக் கொண்டிருந்த போது 3 பைக்குகளில் வந்த 6 இளைஞர்கள், ஆதரவாளர்கள் போல அவரை தேடி வந்து “அண்ணே...” என்று பேச்சுக் கொடுத்துள்ளனர். அவர்களிடம் அவர் ஆர்வமாக பேச தொடங்கிய போது உணவு டெலிவரி பாய் போல ஏற்கனவே அங்கு நின்ற சிலர் அவரது பின்பக்கமாக வந்து தாக்கி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் சுதாரிப்பதற்குள்ளாக ஆதரவாளர்கள் போல வந்தவர்களும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அவரை சராமரியாக வெட்டி உள்ளனர். முதல் வெட்டாக ஆற்காடு சுரேஷின் மச்சான் அருள் என்பவர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
கொலை வழக்கில் தன்னோடு சிறையில் இருந்தவர்கள், சுரேஷின் கிளப்பில் பணியாற்றும் ஊழியர்கள், மற்றும் ஆதரவாளர்களோடு சேர்ந்து கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
ரத்தக்கறை படிந்த அரிவாளை ஆற்காடு சுரேஷின் படத்தின் முன்பு வைத்து பழி தீர்த்து விட்டோம் என அவரது ஆதரவாளர்கள் வழிபட்டதாக தெரிவித்தனர் போலீஸார்.
ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை செட்டில் செய்ய ஆம்ஸ்டிராங் கூறியதாகவும், ஆனால், ஆருத்ரா ஏஜென்டுகளுக்கு ஆதரவாக ரவுடி ஆற்காடு சுரேஷ் களமிறங்கியதால் வெடித்த நேரடி மோதலே இருவரின் உயிரையும் காவு வாங்கியதாக கூறப்படுகிறது.