சென்னை சாலிகிராமத்தில் பிறந்தநாள் பார்ட்டி என்று அழைத்துச்சென்று 11 ஆம் வகுப்பு மாணவிக்கு மதுஊற்றிக் கொடுத்து ஓட்டல் அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா நகரில் பிரபல காபி ஷாப்பில் தோழியாக அறிமுகமான சினிமா ஆடை வடிவமைப்பாளரால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வயிற்று வலி காரணமாக இவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
மாணவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. மாணவி தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் அண்ணா நகரில் உள்ள ஹெல்லா கஃபேவிற்கு அடிக்கடி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கஃபேவில் வைத்து சினிமா ஆடை வடிவமைப்பாளரான இளம் பெண் அகிரா என்பவரை, மாணவி சந்தித்துள்ளார்.
அகிரா, மாணவியிடம் நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு மாணவியை அழைத்துள்ளார். அதன்படி மாணவி சாலிகிராமத்தில் உள்ள ஒரு oyo சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றதாகவும், அங்கு அகிராவுடன், இரண்டு ஆண் நண்பர்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
பார்ட்டியில் மாணவியை வற்புறுத்தி இனிப்பான மதுவை அருந்த செய்ததாகவும், அதனை அருந்தியதும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொடுப்பதாக கூறி ஒரு அறைக்குள் அழைத்துச்சென்ற அகிரா, அந்த அறையை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது. அரை மயக்கத்தில் கிடந்த தன்னிடம் அவருடன் இருந்த இரண்டு ஆண் நண்பர்களும் , அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினரிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
oyo அறையில் அழுதபடி அமர்ந்திருந்த மாணவியிடம் பேச்சுக்கொடுத்த அகிரா, அவர்கள் இருவரும் பயங்கரமானவர்கள் நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவார்கள் என்று மிரட்டியதோடு, மாணவியின் வீட்டுக்கு சென்று இரு தினங்கள் அவருடன் தங்கி இருந்து மாணவியின் நடவடிக்கைகளை கண்காணித்து விட்டு சென்றுள்ளார். அவர் சென்ற பின்னர், தனது சகோதரியிடம், சம்பவம் குறித்து அவர் தெரிவித்து சிகிச்சைக்கு சென்றாதால் பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, பெருங்களத்தூரை சேர்ந்த பிரதிக்ஷா அகிராவை கைது செய்தனர். தனது காதலன் சோமேஷிற்கு விருந்தளிக்க மாணவியை ஏமாற்றி அழைத்து சென்றதாகவும், காதலன் சோமேஷ் அவனது நண்பன் வில்லியம்ஸ் ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வடபழனி கல்லூரி மாணவரான சோமேஷ் என்கிற சோமசுந்தரத்தை கைது செய்த போலீசார் வில்லியம்ஸை தேடி வருகின்றனர்.
கூடா நட்பு கேட்டாய் முடியும் என்பதற்கு இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் ஒரு சாட்சியாய் மாறி இருக்கின்றது.