சென்னையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்ட நிலையில் கணவர் பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் பெண் சிறப்பு தாசில்தார் சரோஜா என்பவர் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு குடியிருப்பு வாசிகளிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் கடந்த 14ந்தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
40 அடி அகலம் கொண்ட ஈஞ்சம்பாக்கம் - வெட்டுவாங்கேணி இணைப்பு சாலையில் 20 அடிக்கும் மேல் ஆக்கிரமிக்கபட்ட கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றினால், உங்கள் பகுதிக்கு பெரிய சாலை வசதி கிடைக்கும் உங்கள் நிலத்தின் மதிப்பும் உயரும் எனவே தனக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தால் ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக கூறி லஞ்சம் கேட்டதால் அவரை சிக்கவைத்ததாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்
ஒரு கோடி ரூபாய் தங்களால் தர இயலாது என கூறியபோது, தனது வீட்டுக்கு அழைத்து பேரம் பேசிய சரோஜா, இறுதியில் 20 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் அதற்கு மேல் குறைத்தால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டியதாகவும், பொன் தங்கவேலு தெரிவித்தார்.
1 கோடி ரூபாய் லஞ்ச பேரத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர் தாசில்தார் சரோஜாவின் கணவரான காவலர் பிரவீன் என்றும் இவர் சென்னை காவல் இணைஆணையர் சிபிசக்கரவத்தியின் சிறப்பு படையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தலைமறைவான அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.