ரஜினியின் கூலி படத்தின் டீசரில் தனது இசையை அனிருத் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்திருப்பதாகக் கூறி தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டீசரில் இளையராஜாவின் இசையில் வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற வா வா பக்கம் வா.. என்ற பாடலின் சில பகுதிகளை அனிருத் பயன்படுத்தி இருந்தார்.
இளையராஜாவின் இசையை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பதாக கூறி அவரது வழக்கறிஞர் தியாகராஜன், கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நோட்டீசில், இளையராஜாவின் அனைத்து பாடல் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் அவரே என்றும், அவரது அனுமதி பெறாமல் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டிருப்பது பதிப்புரிமை சட்டம் 1957ன் கீழ் குற்றம் என்றும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போல் அனுமதி இல்லாமல் இளையராஜாவின் இசையை பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் விக்ரம் என்ற பாடலையும், அவரது தயாரிப்பில் வெளியான ஃபைட் கிளப் படத்தில் என் ஜோடி மஞ்சக் குருவி.. என்ற பாடலையும் மறு உருவாக்கம் செய்திருந்ததாகவும் அதே போல கூலி டீசரிலும் இளையராஜாவின் இசையில் வெளியான பாடலை பயன்படுத்தி உள்ளதற்கு முறையான அனுமதி பெற வில்லை என்றால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அனிருத் முதல் முதலாக இசை அமைத்து பிரபலமான ஒய் திஸ் கொல வெறி பாடலின் மெட்டு கூட இளையராஜாவின் வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி பாடலின் காப்பி என்று ரசிகர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையே கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில், மானிதா மனிதா... என்ற மேதின பாடலை பதிவிட்டுள்ளார்
பாடலுக்கு கீழே எழுத்து வைரமுத்து... இசை இளையராஜா.. குரல் ஜேசுதாஸ்... இந்தப்பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல, உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்...என்று குறிப்பிட்டுள்ளார்