கொடைக்கானலில் உள்ள குணா குகைக்குள் கம்பி வேலி தடுப்பை ஏறிக்குதித்து உள்ளே சென்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 3 இளைஞர்களை வனத்துறையினர் தட்டித்தூக்கி கைது செய்தனர்
விபரீதத்தை உணராமல் தாங்கள் நிற்பது குணாகுகை... என்று கெத்து காட்டுவதாக ரீல்ஸ் செய்து வனத்துறையிடம் கொத்தாக சிக்கிக் கொண்ட த்ரீ இடியட்ஸ் இவர்கள் தான்..!
மஞ்சு மெல் பாய்ஸ் படம் வந்தாலும் வந்தது, குணா படம் பார்த்து திரையரங்கில் இருந்து ஒரு காலத்தில் ஓட்டமெடுத்தவர்கள் எல்லாம்.. பழசை மறந்து புதிதாக பிறந்தது போல புள்ள குட்டிகளுடனும், நட்புக்களுடனும் குணா குகையை காண படையெடுக்க தொடங்கி உள்ளனர்
குணா குகையின் விபரீதம் உணராமல் எவரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்று அந்தப்பகுதியை சுற்றிலும் இரும்பு கம்பியால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் மீறிச்சென்று குணா குகைக்குள் நுழைந்தால் குழிக்குள் குப்புற விழுந்து அல்லல் பட நேரிடும் என்று மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் புத்தி சொல்லி இருந்தாலும், அதனை புறந்தள்ளிவிட்டு சம்பவத்தன்று 3 இளைஞர்கள் குணாகுகைக்குள் தடையை மீறி நுழைந்தனர்.
தடுப்பு வேலியை ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து செல்ஃபி மற்றும் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த அவர்களை கண்டு சக சுற்றுலாபயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, பல கிலோ மீட்டர் சுற்றி வந்ததாக கதைவிட்ட அந்த த்ரீ இடியட்ஸ் பாய்ஸை வனத்துறையினர் வளைத்துப்பிடித்தனர். வன உயிரின பாதுகாப்பு சட்டம், வன பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கெத்து காட்ட நினைத்த கிருஷ்ணகிரி பாரத், விஜய், சேலம் ரஞ்சித் ஆகிய 3 பேரும் தாங்கள் கொண்டு வந்த மொத்த உடமைகளையும் பறிகொடுத்து விட்டு, வனத்துறை அலுவலகத்தில் வெத்தாக நின்றனர்
ஆபத்தை உணராமல், அடங்க மறுத்து அத்துமீறி சென்ற பலர் உயிரிழந்திருப்பதாக சுட்டிக்காட்டும் வனத்துறையினர் குணாகுகைக்கு குடும்பத்தோடும் நண்பர்களுடனும் வருபவர்கள் வனத்துறையினரின் கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர்.