போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபருக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ள நிலையில், ஓட்டல்கள் மட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்கின் ஏற்றுமதி நிறுவனத்திலும் அமீர் பொறுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்திய வழக்கில் சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜெ.எஸ்.எம். ஜாபர்சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீரை முன்னிறுத்தி பல கோடிகளை ஜாபர் முதலீடு செய்துள்ளதாகவும், அவரை வைத்து மாயவலை, இறைவன் மிகப்பெரியவன் உள்ளிட்ட படங்களை தயாரித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக் , இயக்குனர் அமீர் , அப்துல் பாஷித் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் 4 ஏம் கபே என்ற பெயரில் உயர்ரக காபி கடையும், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் லா கபே என்ற பெயரில் ஓட்டலும், ஜூகோ ஓவர் சீஸ் பிரைவேட் டிமிடெட் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அடைக்காலம் கொடுப்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய போதை தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமான அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களின் பெயர் பட்டியலை தயாரித்து வரும் போலீசார் வரும் நாட்களில் ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே ஜாபர் சாதிக் உடன் ஏற்றுமதி தொழிலில் போர்டு ஆப் டைரக்டராக இருப்பது குறித்து போலீசாரிடம் விளக்கம் சொல்லிக்கிறேன் என்று தெரிவித்த இயக்குனர் அமீர் , எல்லோருக்கும் தெரிந்த உண்மையை காவல்துறையிடமும் , அரசாங்கத்திடமும் சொன்னால் நானும் சொல்கிறேன், இறைவன் மிகப்பெரியவன் என்று தெரிவித்தார்