நந்தா பட நீதிபதி நடிகரை அடித்து உதைத்து நகைபறித்த சம்பவத்தில் கல்லூரி மாணவி, நண்பர்களுடன் கைது செய்யப்பட்ட நிலையில், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மாணவியிடம் அத்துமீறியதால் அவரை அரைநிர்வாணமாக அமரவைத்து மன்னிப்புக்கேட்க வைத்ததாக வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது
நந்தா படத்தில் நீதிமன்ற காமெடி காட்சியில் நீதிபதியாக நடித்திருக்கும் இவர் தான் மாணவியிடம் தங்க மோதிரங்களை பறிகொடுத்த மருத்துவர் மதுசூதனன்..!
சென்னை கொரட்டூரை சேர்ந்தவரான மருத்துவர் மதுசூதனன் சென்னை, கோயம்புத்தூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஹாப்பி ஹோம்ஸ் என்ற முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறார். திரையுலக நண்பர்களுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி சில படங்களில் நடித்தும் வருகிறார். 61 வயதான மதுசூதனன், கடந்த 9ந்தேதி கொரட்டூர் ஒத்தாண்டீஸ்வரர் கோயில் அருகே சிறுநீர் கழிக்க காரை நிறுத்தியபோது அங்கு வந்த இளம் பெண் உட்பட நான்கு பேர் சேர்ந்து தன்னிடம் இருந்த இரண்டு தங்க மோதிரங்களை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரித்த போலீசார் மருத்துவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி லோகேஸ்வரி, அவரது நண்பர்களான சையது, சரண் உள்ளிட்டோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோதிரம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் பாலியல் அத்துமீறலை மறைத்த மதுசூதனன் தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீசாரிடம் பொய்யான புகார் அளித்து கல்லூரி மாணவியை போலீசில் சிக்க வைத்ததாக வீடியோ மற்றும் ஆடியோவுடன் தகவல் வெளியாகி உள்ளது.
மசாஜ் கிளப்பிற்கு சென்ற மருத்துவர் மதுசூதனனுக்கு அங்கு பகுதி நேர பணியாளராக இருந்த கல்லூரி மாணவி லோகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித்தருவதாக கூறி பண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்று மாணவியிடம் அத்துமீறியதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது நண்பர் அருணுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்
இதையடுத்து தோழியுடன் மருத்துவரின் பண்ணை வீட்டிற்கு சென்ற லோகேஸ்வரி தனது ஆண் நண்பர்களை வரவழைத்து நடந்ததை விவரிக்க மருத்துவரை அடித்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். அபோது அவர் இதனை வெளியில் சொல்லாமல் இருக்க தனது தங்க மோதிரங்களை கழட்டி கொடுத்ததும், அவர்கள் இதனை வைத்தே மிரட்டி பணம் கேட்டதால் போலீசாரிடம் வழிப்பறி நடந்ததாக புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது.
கல்லூரி மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தால் மருத்துவர் கைதாகி இருப்பார் என்றும் அதை விடுத்து நண்பர்களுடன் சேர்ந்து மருத்துவரை தாக்கி நகைகளை பறித்துச்சென்றதுடன் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் கூட்டாளிகளுடன் சிறையில் கம்பி எண்ணுவதாக போலீசார் தெரிவித்தனர்.