குறும்புக்காரன் என்று இஸ்ரோ செல்லமாக அழைக்கும் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 ராக்கெட்டின் மூலம் இன்று மாலை இன்சாட் 3 டி.எஸ். செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி விண்வெளியில் மற்றொரு மைல்கல்லை எட்ட இந்திய விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர்.
வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய செயற்கைக்கோள், இன்சாட் 3 டி.எஸ்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து இன்சாட் 3 டி.எஸ்.ஸை விண்ணில் செலுத்துவதற்காக தயார் நிலையில் உள்ள ஜி.எஸ்.எல்.வி. எஃப். 14 ராக்கெட்டின் இருபத்தி ஏழரை மணிநேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 2 மணி 5 நிமிடத்திற்கு துவங்கியது.
இன்று மாலை 5.35 மணியளவில் ஏவப்பட உள்ள இன்சாட் 3 டி.எஸ். செயற்கைக் கோள் 2 ஆயிரத்து 275 கிலோ எடை கொண்டது.
வானிலை மாறுபாடுகளை துல்லியமாக கணிக்கும் 25 வகையான கருவிகள் பொறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் மூலம் புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதவிர பூமியின் தரைப்பகுதியிலிருந்து 70 கிலோ மீட்டர் வரை ஒவ்வொரு 40 அடியிலும் என்ன வெப்பநிலை இருக்கிறது என்பதை துல்லியமாக கணக்கிடக் கூடிய இன்சாட் 3 டி.எஸ்., பூமியிலிருந்து 15 கிலோ மீட்டர் உயரத்துக்கு காற்றில் உள்ள ஈரப்பதம் எவ்வளவு என்பதையும், ஓசோன் படலத்தின் நிலையையும் தானியங்கி அமைப்பின் மூலம் ஒருங்கே திரட்டி அனுப்பும்.
இன்சாட் 3 டி.எஸ். செயற்கைகோளைத் தாங்கிச் செல்லும் 51.7 மீட்டர் உயரமுள்ள ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது. இந்த ராக்கெட் ஏவப்பட்டதும் முதல் நிலையில் 139 டன் உந்துசக்தி கொண்ட திட உந்துசக்தி மோட்டார் இயங்கும். 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தி கொண்ட எந்திரமும் 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் கொண்ட கிரையோஜெனிக் எஞ்சினும் இயங்கி செயற்கைக்கோளை அதன் புவி பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும்.
ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 ராக்கெட் இன்றைக்கு மேற்கொள்வது, அதன் 16-வது பயணமாகும். அதில் 6 முறை இந்த ராக்கெட் எதிர்பார்த்தபடி செயல்படாமல் போயிருக்கிறது. இதனால் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 ராக்கெட்டை குறும்புக்காரன் என்று அழைக்கின்றனர், இஸ்ரோ விஞ்ஞானிகள்.
கடைசியாக 2023-ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி விண்ணில் விண்ணில் ஏவப்பட்டபோது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 வெற்றிகரமானதாக இருந்தது.
இம்முறையும் தங்களுக்கு குறும்புக்காரன் கை கொடுத்து பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்த உதவுவான் என ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர், இஸ்ரோ விஞ்ஞானிகள்.