சட்லஜ் நதியில் இருந்து வெற்றிதுரைசாமியின் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து அறிவித்தபடி ஒரு கோடி ரூபாய் மீட்புகுழுவினருக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிதுரைசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க முதல் நபராக நடிகர் அஜீத் சென்ற நிலையில், முக்கிய பிரமுகர்கள் , உறவினர்கள் அஞ்சலிக்கு பின்னர் வெற்றிதுரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இமாச்சலில் சட்லஜ் நதிக்குள் கார் விழுந்த விபத்தில் பலியான வெற்றிதுரைசாமியின் உடல் 8 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் மீட்கப்பட்டு,. விமானம் மூலம் சென்னைகொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சட்லஜ் நதியில் இருந்து கார் மீட்கப்பட்டாலும் வெற்றிதுரைசாமியின் நிலை என்ன என்பது தெரியாததால், தனது மகன் குறித்து தகவல் அளித்தால் 1 கோடி ரூபாய் தருவதாக காவல்துறை மூலம், கசாங் நலா பகுதி மக்களுக்கு சைதை துரைசாமி அறிவித்திருந்தார். தனது மகன் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து 1 கோடி ரூபாயை உள்ளூர் மீட்புக்குழுவினருக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல மறைந்த வெற்றிதுரைசாமி நடிகர் அஜீத்குமாரின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகின்றது. ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு மாணவர்களை இலவசமாக தயார் படுத்தும் மனித நேய பயிற்சிமையத்தின் இயக்குனராக இருந்து ஏராளமான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதால் வெற்றி துரைசாமி மீது அஜீத் அதீத அன்பு வைத்திருந்ததாகவும், அஜீத்துடன் மோட்டார் சைக்கிள் பயணத்திலும் வெற்றித்துரைசாமி பல வெளியூர்களுக்கு சென்று வந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
தன்னுடைய நண்பராக இருந்த வெற்றிதுரைசாமியின் மரணச்செய்தி அறிந்த அஜீத், சைதை துரைசாமியின் ராஜகீழ்ப்பாக்கம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார், சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக இருந்து வெற்றிதுரைசாமியின் உடல் வரும் வரை அஜீத் காத்திருந்தார். மாலை விமானம் மூலம் சென்னை வந்த வெற்றிதுரைசாமியின் உடல ராஜகீழ்ப்பாக்கம் வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அஜீத்தும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நந்தனம் வீட்டில் வைக்கப்பட்டது.
அங்கு வெற்றி துரைசாமியின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, வைகோ,சீமான் , அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குனர் அமீர் உள்பட ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்
அஞ்சலிக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட வெற்றித்துரைசாமியின் உடல் தியாகராய நகரில் உள்ள கண்ணாமாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.