சென்னை குன்றத்தூரில் ஒரே பெண்ணை இருவர் காதலித்த விவகாரத்தில் நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு, உடலைத் துண்டு துண்டாக வெட்டி செம்பரம்பாக்கம் மற்றும் வண்டலூர் ஏரிகளில் வீசியதாக நந்தம்பாக்கம் வர்த்தக மையக் காவலாளி கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை குன்றத்தூர் அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தலை, கை, கால்கள் இல்லாமல் முண்டமான உடல் ஒன்று கல்லை கட்டி வீசப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதே பகுதியில் இரண்டு கால்கள் கிடைத்த நிலையில் தலை மற்றும் கைகள் எங்கு உள்ளது என்றும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன ? என குன்றத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் அணிந்திருந்த டி ஷர்ட்டை அடையாளமாக வைத்து அது சென்னையில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கியதும் உறுதி செய்யப்பட்டது.
அதன் மூலம் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பதும் 33 வயதுடைய அவர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவருடன் பணிபுரிந்து வந்த காவலாளியான சிறுகளத்தூர், சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த திலீப்குமாருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டுபிடித்த போலீசார் சம்பந்தப்பட்டவரை பிடித்து விசாரித்த போது கொலைக்கான திகில் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேலை செய்த பெண் ஒருவருடன் பூமிநாதனுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அதே பெண் , திலீப் குமாருடனும் நெருங்கி பழகியதால் திலீப்குமாருக்கும், பூமிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு தான் அதிக அளவில் பணம் செலவழித்து இருப்பதாக கூறிய திலீப்குமார் பணத்தை தருமாறு கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அபோது திலீப்குமாரை பூமிநாதன் அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து டிசம்பர் மாதம் 27ஆம் தேதி இரவு கூட்டாளியுடன் சென்று பூமிநாதனை மிரட்டி தனது மோட்டார் சைக்கிளின் நடுவே அமர வைத்து திலீப்குமார் கடத்திச் செல்ல முயன்றபோது அவர் கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது துப்பாக்கியை எடுத்து பூமிநாதன் தலையில் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகின்றது. பூமிநாதன் உடலை 12 கிலோமீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளில் அமர வைத்தபடியே சிறுகளத்தூரில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று கை, கால், தலை ஆகியவற்றை துண்டு, துண்டாக வெட்டியதாகவும், உடலில் கல்லை கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியதாகவும், தலை மற்றும் கைகளை வண்டலூர் ஏரியில் வீசியதாகவும் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இருவரையும் கைது செய்த போலீசார் திலீப் குமாரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 17 தோட்டாக்கள் மற்றும் இரண்டு வெட்டரிவாள்கள், மற்றும் சடலத்தை தூக்கிச்செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து உள்ளனர். ராஜஸ்தானில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வந்த திலீப்குமார், அவற்றை தனது நண்பரான வினோத் என்பவரிடம் கொடுத்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.கொலை சம்பவத்தில் ஈடுபடும்போது திலீப்குமார் சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததாகவும் , பூமிநாதனை கொலை செய்து விட்டு உடல் பாகங்களை அப்புறப்படுத்தி விட்டு அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல் சபரிமலைக்கும் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.