சென்னை திருவொற்றியூர் மான்போர்டு தொடக்கப்பள்ளியில் தமிழில் பேசிய 5 ஆம் வகுப்பு மாணவனை கண்டிக்கும் விதமாக ஆசிரியை ஒருவர் மாணவனின் காதை திருக்கிய நிலையில், காது அறுந்து தொங்கியதாக பெற்றோர் புகார் அளித்தனர்
பள்ளியில் தமிழில் பேசியதால் காது அறுபட்டு சிகிச்சையில் உள்ள 5 ஆம் வகுப்பு மாணவன் இவர் தான்..!
சென்னை திருவொற்றியூர் கே. சி.பி. ரோடு அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த கேசவன் - குகன்யா தம்பதியரின் 10 வயது மகன் மனிஷ் மித்ரன். சிறுவன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள மான்போர்டு நர்சரி பிரைமரி தனியார் பள்ளியில் 5 வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 23 தேதி பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம், மனிஷ் மித்ரன் கீழே விழுந்து அடிபட்டு காயம் அடைந்து இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி பள்ளி ஆசிரியர் தாய் குகன்யா வுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு வரும்படி கூறியுள்ளனர்.
இதனால் பதறிப்போய் ராயபுரம் நிச்சாணி மருத்துவமனைக்கு சென்ற தாய் குகன்யா, தனது மகன் மனிஷ் மித்ரனின் இடது காது துண்டாகி அறுந்து தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காதில் முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
உடனடியாக மகன் மனிஷ் மித்ரனை சென்னை தண்டையார்பேட்டை அப்போல்லோ மருத்துவமனையில் தாய் குகன்யா அனுமதித்தார் . அன்று இரவே மனிஷ் மித்ரனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து காது ஒட்டப்பட்டது . தனது மகனை தாக்கிய ஆசிரியை நாயகி ரொம்ப கண்டிப்பானவர் என்றும் தனது மகன் மனிஷ் மித்ரன் பள்ளியில் தமிழில் பேசிய நிலையில், ஆங்கிலத்தில் பேசாதது ஏன் ? என்று கேட்டு, காதை இறுக்கமாக பிடித்து திருகிய போது பலத்த காயம் அடைந்ததாக தாய் குற்றஞ்சாட்டினார்
ஆசிரியை நாயகி மீது இராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே மாணவனின் தாய் குகன்யா , கன்னத்தில் அறைந்ததாக கூறி ஆசிரியர் நாயகி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு தரப்பு புகார் குறித்து இராயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.