பூந்தமல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிக்கன் ரைஸில் தானே தலைமுடியை பிடுங்கிப் போட்டு , உணவில் முடி கிடப்பதாக வம்பிழுத்து, சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் தப்பிய இளைஞரின் நாடகம் சிசிடிவியால் அம்பலமானது.
சிக்கன் ரைஸ்சில் தலைமுடி கிடப்பதாக வம்பிழுத்து சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் கம்பி நீட்டிய பலே ஆசாமி இவர் தான்..!
சென்னை அடுத்த பூந்தமல்லி, லட்சுமிபுரம் சாலையில் வட மாநில இளைஞர்கள் நடத்தும் உணவகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். உணவை சாப்பிட்டு முடிக்க இருந்த சிறிது நேரத்தில் உணவக ஊழியரை அழைத்து "இந்த உணவில் தலைமுடி இருப்பதாகவும், அதனால் உணவுக்கு பணம் கொடுக்க முடியாது" எனவும் கூறி தகராறு செய்துள்ளார்.
இதனால் உணவக ஊழியர்களும் அவரிடம் பணம் வாங்காமல் அனுப்பி வைத்தனர். உணவில் இருந்த முடி அப்பொழுதுதான் சாப்பாட்டில் விழுந்தது போல் இருந்ததால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
உணவு அருந்திய நபர் சாப்பிட்டு முடிக்க சிறிது நேரம் இருந்த நிலையில் தன்னுடைய தலையில் இருந்து தலைமுடியை தானே பிடுங்கி உணவில் போட்டு உணவில் தலைமுடி இருப்பதாக கூறி நாடகம் ஆடியது அம்பலமானது.
சாப்பிட்ட உணவிற்கு கொடுக்காமல் இருப்பதற்காக அந்த நபர் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த ஓசி சோறு ஆசாமி மீது உணவக ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.