தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலம் முடிந்து சென்னை கோயம்பேட்டுக்கு வந்தடைந்த விஜயகாந்தின் உடல் கண்ணாடி பேழையில் இருந்து சந்தனப் பேழைக்கு மாற்றப்பட்டது. தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கட்சி அலுவலகத்துக்கு வெளியே குழுமி இருந்தனர். கேப்டன், கேப்டன் என்று முழக்கமிட்டபடி இருந்த அவர்கள் தங்கள் செல்ஃபோன் டார்ச்சை ஒளிரச் செய்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் உடலுக்கு 24 காவலர்கள் 3 சுற்றுகள் வானத்தை துப்பாக்கியால் நோக்கி சுட்டு அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, குடும்ப முறைப்படி விஜயகாந்துக்கு உறவினர்கள் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர். விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இறுதிச் சடங்குகளை செய்தனர்.
சைவ மந்திரங்கள் ஓத தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த குழியில் விஜயகாந்தின் உடல் அடங்கிய சந்தனப் பேழை இறக்கப்பட்டது.
இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரேமலதா, விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.