சென்னை தாம்பரம் அருகே பெண் ஐ.டி ஊழியரின் கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டி உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவயது முதல் பழகிய பெண் காதலிக்க மறுத்ததாக கூறி திருநம்பியாக மாறியவன் கொலை செய்த கொடூர சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தன்னை விட்டு விலகிய காதலியை எரித்துக் கொன்று விட்டு, கைதான, வெற்றிமாறன் என்ற, திருநம்பி இவன்தான்...
சென்னை புறநகர் பகுதியான பொன்மார் வேதகிரி நகரில் சனிக்கிழமை மாலை கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் பாதி எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் இளம்பெண் ஒருவர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர் அப்பகுதியினர்.
சாகும் தருவாயில் இருந்த அந்த பெண்ணோ தன்னைப் பற்றி எந்த விபரங்களும் தெரிவிக்காமல் செல்ஃபோன் எண் ஒன்றை மட்டுமே தெரிவித்து விட்டு உயிரிழந்தார்.
பெண் கூறிய அந்த செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசியவர் தன்னை வெற்றிமாறன் என தெரிவித்துள்ளார். விபரங்களை கூறிய போலீஸார், வெற்றிமாறனை உடனடியாக மருத்துவமனைக்கு வரவழைத்தனர்.
அங்கு சென்ற வெற்றிமாறன், இறந்தவர் மதுரையைச் சேர்ந்த நந்தினி எனவும், துரைப்பாக்கத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தானும் அதே நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருவதாகவும், இருவரும் பள்ளிக்காலம் முதலே நண்பர்கள் எனவும் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.
நந்தினியின் மற்ற நண்பர்களை விசாரித்த போது, வெற்றிமாறனுடன் அவர் கடைசியாக சென்ற தகவல் கிடைக்கவே, தங்களது பாணியில் விசாரித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
பாண்டீஸ்வரி என்ற பெயரில் பெண்ணாக பிறந்து வளர்ந்த தனக்கு நந்தினி தோழியாக இருந்ததாகவும், தனது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்மை தனம் அதிகரிக்கவே, திருநம்பியாக மாறி தனது பெயரை வெற்றிமாறன் என்று மாற்றிக் கொண்டதாகவும், அவன் கூறியுள்ளான். தான் காதலிப்பதாக கூறியதும் நந்தினி விளையாட்டாக எடுத்துக் கொண்டதாகவும், தொடர்ந்து தான் வற்புறுத்தி வந்ததால் நந்தினி தன்னை விட்டு விலக துவங்கியதாகவும் தெரிவித்தான் வெற்றிமாறன்.
மற்றவர்களுடன் சகஜமாக பேசும் நந்தினி தன்னை மட்டும் ஒதுக்கியதால், தனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவு எடுத்து கொலை திட்டத்தை வெற்றி மாறன் அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.
ஞாயிறன்று, நந்தினிக்கு பிறந்த நாள் என்பதால் முந்தைய நாள் அவரை சந்தித்து சர்ப்ரைஸ் தருவதாக கூறி பொன்மார் பகுதிக்கு நந்தினியை அழைத்து சென்றுள்ளான் வெற்றி மாறன்.
அங்கு, தான் ஏற்கனவே கொண்டு சென்ற சங்கிலியால் அவரது கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டி பூட்டு போட்டான் வெற்றிமாறன். ஏன், பூட்டு போடுகிறாய் எனக் கேட்ட நந்தினியிடம் அதுதான் சர்ப்ரைஸ் எனக் கூறியவன், திடீரென தான் வைத்திருந்த பிளேடால் அவரது கை, கால் நரம்புகளை வெட்டத் துவங்கியுள்ளான். வலி தாங்காமல் கத்திய நந்தினி வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான் வெற்றிமாறன். தீ எரிவதைப் பார்த்து அங்கு பொதுமக்கள் வரவே, ஓடி ஒளிந்து கொண்டான் வெற்றிமாறன்.
நந்தினியை, பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை ஒளிந்திருந்து பார்த்ததாகவும், தனது செல்ஃபோன் எண்ணை கூறி நந்தினி தன்னை மாட்டி விட்டதாகவும் தெரிவித்துள்ளான் வெற்றிமாறன். இதனையடுத்து வெற்றிமாறனை கைது செய்து விசாரித்து வருகின்றனர் போலீஸார்.