சென்னை எர்ணாவூர் மற்றும் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்தது குறித்து பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து செவ்வாயன்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எர்ணாவூர், திருவொற்றியூர் மேற்கு பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஊருக்குள் புகுந்த வெள்ள நீருடன் கச்சா எண்ணெய் கலந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.
வீட்டின் சுவர்கள் பொருட்கள் அனைத்தும் ஆயில் படிந்து வீணாகி போனதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் கச்சா எண்ணெய் கசிவு கடலின் முகத்துவாரத்திலும் கலந்துள்ளதால் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடும் அவதியுற்றுள்ளனர்.
இந்த நிலையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, உண்மை நிலையை அறிய தமிழக அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை? என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. அதற்கு, மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய கழகத்தின் தெற்கு நுழைவு வாயில் அருகே கசிவு ஏற்பட்டதற்கான எண்ணெய் தடயங்கள் இருப்பதாகவும், ஆனால், இதுவரை நடத்திய விசாரணையில், வெள்ள நீரில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் கலக்கப்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எண்ணெய் படலங்கள் பரவியதை வெறும் தடயம் என எவ்வாறு கூற முடியும் என்று வினவினர். தங்களது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த ஒரு கசிவும் ஏற்படவில்லை என்றும், அப்பகுதியில் 25 ரசாயன ஆலைகள் இயங்கிவருவதால், தங்களது நிறுவனம் மட்டுமே கசிவிற்கு காரணமல்ல என்று சென்னை பெட்ரோலிய கழகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.