வேளச்சேரி வெள்ளச்சேரியாகி நீரில் மிதக்கும் நிலையில் , காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானாவை மறித்த பெண் ஒருவர், வெள்ளநீரை வடியவைக்க 4 நாட்களாக ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை ? எனக்கேட்டு கேள்விகளால் துளைத்தெடுத்த நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ அசோக்குடன், அசன் மவுலானா மல்லுக்கு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை வேளச்சேரியில் மழைவெள்ளம் 4 நாட்களாக வடியாத நிலையில் அங்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ அசன் மவுலானாவை , படகுகள் மூலம் சாலைக்கு வந்த அப்பகுதி மக்கள் மறித்து அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர். பதில் சொல்ல மறுத்து காரில் ஏறி புறப்பட முயன்றவரை மறித்த பெண் ஒருவர், ஹசன் மௌலானாவிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்
அப்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அசோக் தனது ஆதரவாளர்களுடன் அங்கு நிவாரண உதவி வழங்குவதற்காக வந்த நிலையில் , அந்த பெண்ணுக்கு காசு கொடுத்து என்னிடம் வாக்குவாதம் செய்ய சொன்னது அதிமுகவினர் என ஹசன் மௌலானா கூறியதால் அசோக் ஆதரவாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்தப் பெண் நான் அதிமுகவும் இல்லை , எந்த கட்சியும் இல்லை .. இந்த பகுதியில் வசிக்கிறேன் , எனக்கு கட்சி அடையாளம் கொடுக்காதீர்கள் என ஹசன் மௌலானாவுக்கு பதில் கூறினார்.
இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் குவித்திருந்த நிலையில் ஹசன் மௌலானாவும் , அசோக்கும் சாலையில் நின்று நேருக்கு நேர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கேள்வி கேட்பதற்கு நான் பொறுப்பாக முடியாது என அசோக் கூறிய நிலையில் ஹசனுக்கு ஆதரவாக திமுகவினர் முன்வந்து அசோக்கிடம் கோபமாக பேசினர். இதையடுத்து அசோக் தனது அதரவாளர்களுடன் டான்சி நகருக்குள் நிவாரண பணிகளை மேற்கொள்ளுவதற்காக புறப்பட்டுச் சென்றார்
சுனாமி வந்தபோது ஊருக்குள் தண்ணீர் வந்ததைப் போல , தற்போது மழை பொய்ததால் வேளச்சேரிக்குள் தண்ணீர் வந்துவிட்டது என்று கூறிய ஹசன் , மழைவெள்ளத்தை ஏன் தடுக்கவில்லை என்று கேட்பது சுனாமியை கடலிலேயே ஏன் தடுக்கவில்லை என்று கேட்பதைப் போல உள்ளது என்று மக்களை பார்த்து கூறினார்.