சென்னை அண்ணா சாலையை விரைவாக கடந்து செல்லும் வகையில், எட்டு சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் புதிய மாற்றங்களை செய்துள்ளனர்.
சிம்சனில் தொடங்கி சைதாப்பேட்டை வரையிலான 8 சிக்னல்களில் ஐந்து, முழுமையாக அணைக்கப்பட்டுள்ளன. வாகன நெரிசல் மிகுந்த ஸ்பென்சர்ஸ், எல்டாம்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு ஆகிய 3 சிக்னல்களை வாகனங்கள் வேகமாக கடந்து செல்லும் வகையில் யூ-டர்ன் அமைத்து புதிய மாற்றங்களை போக்குவரத்து போலீசார் அமல்படுத்தியுள்ளனர்.
புதிய மாற்றங்களால் எழும்பூரில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் பயண நேரம் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 40 நிமிடங்களாகக் குறைந்துள்ளதாக போக்குவரத்துப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று, சென்னை முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 65 சிக்னல்களில் படிப்படியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
அண்ணா சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலைக் குறைத்து நேரம் மற்றும் எரிபொருள் விரயத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கும் போக்குவரத்து காவல்துறையின் உயரதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.