சென்னைக்கு ரெயிலில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட கத்திக்குத்து கொள்ளையனை, கவரிங் செயினுடன் சாதாரண உடையில் சென்று இரு பெண் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இவங்க ரெண்டு பேரும் தான் கத்திக்குத்து கொள்ளையனை மடக்கிப்பிடித்த அந்த சிங்க பெண் போலீசார்..!
சென்னை வரும் ரெயில்களில் தனியாக பயணிக்கும் பெண்களைக் குறிவைத்து மாஸ்க் அணிந்த கொள்ளையன் ஒருவன் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை பறித்துச்செல்வதாக புகார்கள் வந்தன. இரு மூதாட்டிகளிடம் தங்கக் கம்மலை மிரட்டி பறித்துச்சென்ற கொள்ளையன் அரசு பெண் அதிகாரி ஒருவரது கையில் கத்தியால் வெட்டி தாலிச் சங்கிலியை பறித்துச்சென்றான்.
இந்த கத்திக்குத்து கொள்ளையனைப் பிடிக்க ரெயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில், சிங்கம் படத்தில் சூர்யாவின் வலதுகரம் போல நடித்த நிஜ டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் உள்ள காவல் ஆய்வாளரும் பெண் போலீஸ் ஒருவரும் சுடிதார் மற்றும் சேலை அணிந்து கழுத்தில் கவரிங் செயினுடன் கடந்த 10 தினங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு ரெயிலாக பயணித்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே சம்பவத்தன்று அந்த மாஸ்க் ஆசாமி ஒரு ரெயிலில் வந்தான், கழுத்தில் செயினுடன் தனியாக அமர்ந்திருந்த பெண் போலீசிடம் நகையை பறிக்க முயல அவனை, பெண் காவல் ஆய்வாளருடன் மடக்கிப்பிடித்தனர். அவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரும் உதவினர்.
கொள்ளையனிடம் விசாரித்தபோது அவன் பெயர் ஆனந்தன் என்பதும் அவன் அன்றைய தினமும் கொள்ளைத் திட்டத்துடன் ரெயிலில் ஏறி சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளான். துணிச்சலுடன் மடக்கிப்பிடித்த பெண் காவலர்களுக்கும், உதவிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் இருவருக்கும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது
தனியாக செல்லும் பெண்கள் நகைகள் அணிந்து சென்றால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டனர்.