சென்னையில் மறுமணம் செய்வதாக கூறி 39 வயது பெண்ணை ஏமாற்றி 415 சவரன் நகைகளுடன் தலைமறைவான 'மேட்ரிமோனியல்' மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். நகைக்கடை அதிபர் என்று கதை அளந்த மோசடி ஆசாமி கம்பி எண்ணும் பின்னனி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
நீங்க நம்பலைன்னாலும், இது தான் நெசம்.... இவர்தான் 39 வயது பெண்ணிடம் 415 சவரன் நகைகளை அப்படியே ஆட்டைய போட்ட அல்டாப் ஆசாமி..!
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது ஷாபான் என்கிற ரஹ்மத்துல்லாஹ் . பிசிஏ பட்டதாரியான இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், வேலைக்கு எதுவும் செல்லாமல் மறுமணம் செய்து கொள்ள வரன் தேடும் பெண்களை குறி வைத்து அவர்களிடம் பழகி பணம் பறித்து சொகுசாக வாழ்வதை வழக்கமாக வந்ததாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் சென்னையைச் சேர்ந்த 39 வயதான பெண்மணி ஒருவர் மறுமணம் செய்து கொள்ள வரன் தேடி உள்ளார். அவரது பெற்றோர் முஸ்லிம் மேட்ரிமோனியல் இணையத்தில் தங்கள் பெண் குறித்த விவரங்களை பதிவிட்டுள்ளனர். அதை பார்த்து முகமது ஷாபான் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். தான் கோவையில் தங்க நகைக்கடை அதிபர் எனவும், ஸ்டீல் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் எனவும் தன்னை பெரும் தொழிலதிபர் என காட்டிக்கொண்டு பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூற அவரது பெற்றோரும் சம்மதித்துள்ளார்.
இவர் சொன்னதை நம்பி அந்த நபருடன் சென்னையைச் சேர்ந்த பெண்ணும் பழகிய நிலையில், அவர்களது அறியாமையை பயன்படுத்திக் கொண்ட முகமது ஷாபான், குடும்பத்திற்கு யாரோ செய்வினை வைத்திருப்பதாகவும், அந்த செய்வினைகளை முஸ்லிம் ஹஜ்ரத்திடம் சொல்லி மசூதியில் வைத்து மந்திரம் ஓதி தீர்த்து விடலாம் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். வீட்டில் உள்ள மொத்த தங்க நகைகளையும் மசூதியில் வைத்து ஓத வேண்டும் என அவர் கூறியதை நம்பி அந்த பெண்ணிற்காக வாங்கி வைத்திருந்த 415 சவரன் தங்க நகைகளை ஒரு துணியில் வைத்து சுற்றி கொடுத்துள்ளனர். அதனை எடுத்துச்சென்ற முகமதுஷாபான் தலைமறைவாகிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் தனது பெற்றோரிடம் விவரத்தை தெரிவிக்க இது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
உதவி ஆணையர் ஜான் விக்டர் தலைமையில் விசாரணை நடத்திய போலீசார் புதுச்சேரியில் பதுங்கி இருந்த மோசடி நபர் முகமது ஷாபானை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 சவரன் நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும் மீதம் உள்ள நகைகள் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்த போலீசார் மூன்று செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் போன்றே பல பெண்களிடம் இந்த நபர் பேசி வந்ததும் பல்வேறு பெயர்களில் பல்வேறு மேட்ரிமோனியில் இணையதளங்களில் மாப்பிள்ளை கெட்டப்பில் பதிவு செய்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 'கில்லாடி' மாப்பிள்ளை முகமது ஷாபான் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இருந்தும் ஏன் இவர் மீது புகார் அளிக்கவில்லை என்பது குறித்து அறிய, முகமது ஷாபானை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.