சென்னை அண்ணா சாலையில் பிரபல துணிக்கடை உரிமையாளரின் மகன் அதி வேகமாக காரை ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்
சென்னை அண்ணா சாலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் டிஎம்எஸ் மெட்ரோ அருகில் அண்ணா மேம்பாலம் நோக்கி அதி வேகமாக வந்த கார் ஒன்று அடுத்தடுத்து சில வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது.
விலையுயர்ந்த BMW ரக காரை ஓட்டி வந்தது சூப்பர் சரவணாஸ்டோர் உரிமையாளர் சபாபதியின் மகன் யோகேஷ் ரத்தினம் என்று தெரிவித்த போலீசார், மற்றொரு காரில் வந்த நண்பர்களுடன் அவர் போட்டி போட்டு ரேஸ் ஓட்டிய போது கட்டுப்பாட்டை இழந்த BMW கார் சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி நிலை தடுமாறி இருசக்கரவாகனங்களில் சென்ற இருவர், சைக்கிளில் சென்ற ஒருவர் என 3 பேரை அடித்து தூக்கியதாக தெரிவித்தனர்.
இறுதியாக இடது புறம் உள்ள பிளாட்பாரத்தில் உள்ள கம்பிகளை உடைத்து மின் கம்பத்தில் மோதி BMW கார் நின்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே விபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து காவல்துறையினர் யோகேஷ் ரத்தினம் மீது3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.