சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முகலிவாக்கத்தில் பாதாள சாக்கடைப் பணிகள், குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக சிதைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வரும் மழைகாலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்புங்க... இது பெரு நகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முகலிவாக்கம் சாலை தான்..!
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட முகலிவாக்கத்தில் குடிநீர்க் குழாய் பதித்தல் பாதாளச் சாக்கடை அமைத்தல், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் முகலிவாக்கம் பிரதான சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது .
முகலிவாக்கம் பகுதி மக்கள் கிண்டி நோக்கிச் செல்வதற்கும், போரூர் நோக்கிச் செல்வதற்கும் முகலிவாக்கம் பிரதான சாலையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் என அனைவருமே பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், சில விபத்து ஏற்படுவதாகவும், வாகனங்கள் பழுதாகி விடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் பயண நேரம் விரயமாவதாகவும், சாலை மோசமாக உள்ளதால் அதிக நேரம் ஆகிறது என்றும் இதனால் குறித்த நேரத்திற்கு அலுவலகம், பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை எனவும் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வந்து செல்ல கூட தாமதம் ஆவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
வளர்ச்சிப் பணிகள் மிக முக்கியமானவை. அதே வேளையில் முறையாகத் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்த பகுதியில் முன் திட்டமிடல் இல்லாமல் பணிகள் மேற்கொண்டதால் தினம் தினம் சாலையில் புதிது புதிதாக குழிகள் தோன்டப்படுவதாகவும். சாதாரண மழைக்குக் கூட தேங்கும் நீரில் பள்ளம் எது ? சாலை எது ? என தெரியாமல் பல தெருக்கள் சுற்றி செல்வதாகவும் தெரிவித்தனர்
2019 ஆம் ஆண்டில் இந்த பகுதியை உள்ளடக்கிய மணப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் மீண்ட கால இழுவைக்குப் பின்னர் கடந்த ஜூலை மாதம் தான் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாக தற்காலிகமாக சாலை சீரமைத்து கொடுக்கப்பட்ட நிலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்ட பணிகளால் சாலைகள் சிதிலம் அடைந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதற்கிடையே பருவமழை காலத்திற்குள் சாலைகள் முழுமையாக அமைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.