காரைக்காலை சேர்ந்த இளைஞரை முகநூல் மூலம் 6 வருடமாக காதலித்து, வீட்டை விட்டு வெளியேறிய சென்னை தொழில் அதிபர் மகள் ஒருவர், காதலன் கட்டிய தாலி போதும் என்று தான் அணிந்திருந்த தங்க நகைகளை எல்லாம் உறவினரிடம் கழட்டிக் கொடுத்துவிட்டு சென்றார்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் கமலஹாசனின் மகள் தீபிகா. வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8ந்தேதி கல்லூரிக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த கமலஹாசன் இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி பயன்படுத்திய செல்போனை வைத்து மாணவி காரைக்கால் அடுத்த நிரவி பகுதியில் இருப்பது தெரியவந்தது.
அம்பத்தூர் போலீசாருடன் கமலஹாசனின் உறவினர்கள் மாணவியை மீட்க காரைக்கால் விரைந்தனர். அதற்குள்ளாக மாணவி தீபீகா, நிரவி பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவரை திருமண்ம் செய்து கொண்டதாகவும், பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டு நிரவி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அம்பத்தூர் போலீசார் தேடிவருவதால் இருவரும் அங்கு செல்லுமாறு கூறி போலீசார் வெளியே அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் தீபிகாவும் காதலன் கவுதமும் பாதுகாப்புக் கேட்டு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு ஆஜரான அம்பத்தூர் போலீசார் , பெண் மாயமான வழக்கில் தீபீகாவை அழைத்துச்செல்ல வந்திருப்பதாக கூறினர்.
ஆனால் தனக்கு 19 வயது ஆகி விட்டதால் சுயமாக முடிவு எடுக்க கூடிய அதிகாரத்தை சட்டம் தனக்கு கொடுத்திருப்பதாகவும், தான் காதலன் கவுதமை திருமணம் செய்து கொண்டு முறைப்படி பதிவும் செய்து கொண்டதாக தீபீகா தெரிவித்தார், இதையடுத்து அவரது விருப்பப்படி காதலனுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து தனது காதல் கணவனுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த தீபிகா, தான் கடந்த 6 வருடங்களாக முக நூல் மூலம் கவுதமை காதலித்து வந்ததாகவும், தங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்
தீபிகா பேட்டி அளித்து முடிந்ததும் ஏமாற்றத்துடன் அவர் முன் வந்து நின்ற உறவினரிடம், தந்தை தனக்கு வாங்கிக் கொடுத்த தங்க சங்கியையும், ஸ்மார்ட் போனையும் கொடுத்தார்.
அப்போது உறவினர் கம்மலையும் கேட்டதால், காதலன் கட்டிய மஞ்சள் தாலியே போதும் என்று கம்மலையும் கழட்டிக் கொடுத்தார். உறவினரோ நல்லா இரும்மா... என்று சோகத்துடன் கூறியபடி நகைகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டுச்சென்றார்
படிக்கிற வயதில் காதலில் விழுந்ததால் அந்த மாணவி படிப்பையும் பெற்றோர் வைத்த அன்பையும் தொலைத்துக் கொண்டு நிற்பதாக உறவினர்கள் ஆதங்கத்துடன் புறப்பட்டுச்சென்றனர்.