ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக சம்பவ இடத்தில் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்ட இடத்தையும், வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்ட இடங்களையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் பேட்டியளித்த அவர், இசைக்கச்சேரிக்கு 25 ஆயிரம் பேர் வருவதாக அனுமதி பெற்ற நிலையில், அந்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான பொதுமக்கள் வாகனங்களில் வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் பலரை போலீஸ் தடுத்து நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பார்க்கிங்கில் மழை நீர் நின்றதால் வாகன ஓட்டிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதனிடையே, போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ வசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் குறைபாடுகள் ஏற்படாத வகையில் தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.