சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஸ்டாலுக்கு 2 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என தி.மு.க. பிரமுகர் ஒருவர் கேட்டதால் எரிச்சலடைந்த மாநகராட்சி ஆணையர், அந்த பணத்தை தாமே தந்து விடுவதாக கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் தனியார் அமைப்பு சார்பில் அண்ணாநகர் டவர் பூங்காவில் இரண்டு நாள் ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 60 அரங்குகள் கொண்ட கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்ற ராதாகிருஷ்ணன் பிடித்தமான ஓவியங்களை பணம் கொடுத்து வாங்கினார்.
ஸ்டால் அமைத்தவர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கிக் கொண்டிருந்த போது ஆணையர் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர், தொகுதி எம்.எல்.ஏவுக்கும், வார்டு கவுன்சிலருக்கும் தகவல் தெரிவிக்காமல் எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என கேள்வி எழுப்பினார்.
இதை கவனிக்காமல் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது பின்னால் இருந்த மற்றொரு கரை வேட்டிக்காரர், கண்காட்சி நடத்த ஸ்டாலுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையில் வாங்குகிறார்கள் என்று கூறினார்.
உடனே தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர், ஒரு ஸ்டாலுக்கு டூ தவுசன் வேண்டும் என்று கூறவே, அதையும் தானே தந்து விடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து நகரத் துவங்கினார் ராதாகிருஷ்ணன்.
அண்ணா நகர் பூங்காவில் வாரத்தில் 3 நாட்களுக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக பின்னணியில் இருந்த ஒருவர் குரல் எழுப்பினார். அதற்கு, இனிமேல் அண்ணாநகர் பூங்காவில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது என்றும் சென்னையில் மற்ற பகுதிகளில் நிகழ்ச்சியை நடத்திக் கொள்வதாகவும் கூறினார் ராதாகிருஷ்ணன்.
குரல் எழுப்பியவரிடம், நீங்கள் மட்டுமே பொதுமக்கள் கிடையாது என தெரிவித்த ஆணையர், ஜனரஞ்சகமான நிகழ்ச்சியை நடத்த விடுங்கள், உங்களுக்கான பணத்தை நானே தந்து விடுகிறேன் என மீண்டும் மீண்டும் கூறும் நிலைக்குச் சென்றார் ராதாகிருஷ்ணன்.
நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறிச் சென்றவரை விடாமல் கரை வேஷ்டியினர் பின்தொடரவே, நீங்கள் எங்கெங்கெல்லாம் எவ்வளவு வாங்குகிறீர்கள் என்ற விபரமெல்லாம் எனக்குத் தெரியும் என்று ஆணையர் பதிலடி கொடுத்ததை அடுத்து, சற்று பம்மத் துவங்கினார் ஜெய்சங்கர்.
நிகழ்ச்சி நடைபெற்ற டவர் பூங்கா மாநகராட்சியின் 100 மற்றும் 102வது வார்டு பகுதிக்கும் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியின் கீழ் வருவதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலர்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டதாக தெரிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தபசியா இன்டர்நேஷனல் ஆர்ட் பவுண்டேஷன் அமைப்பினர். இந்தியாவில் பல நகரங்களில் தாங்கள் ஓவியக் கண்காட்சி நடத்தி உள்ளதாகவும், எங்குமே அரங்கு அமைக்க பணம் வாங்கியது இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஒரு அரங்கிற்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டுமென மாநகராட்சி ஆணையரிடமே கட்சிக்காரர்கள் கேட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.