500 டன் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 38 லாரிகளை தனியாருக்கு சொந்தமான ரகசிய இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி மத்திய சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கான்கார்டு யார்டில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...
சென்னை மணலி புதுநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மலையை உடைக்கும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 25 கண்டெய்னர் லாரிகள் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரகசியமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் கடந்த 15 ந்தேதி நள்ளிரவு நேரத்தில் கொட்டும் மழைக்கிடையே ஏராளமான போலீசார் தீவிர சோதனையில் இறங்கினர். சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்புளோசிவ் லாரிகளை அடையாளம் கண்டனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த செங்குன்ற காவல் துணை ஆணையர் பாலசுப்ரமணியம் விரைந்து வந்து அங்கு நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லாரிகளை பார்வையிட்டார். அவற்றை அங்கு நிறுத்தி வைத்திருந்த உரிமையாளர் சுகுமாறனை வரவழைத்து விசாரித்தனர், மொத்தம் 38 லாரிகளில் 500 டன்னுக்கும் அதிகமான வெடி பொருட்கள் அங்கு இருப்பது தெரியவந்தது. தனக்கு வெடி பொருட்களை நாக்பூரில் இருந்து ஏற்றி வந்து சென்னை துறைமுகத்தில் கப்பலில் ஏற்றி துருக்கி நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதி இருப்பதாக சுகுமாறன் தெரிவித்தார்.
உரிய அனுமதி இல்லாமல் ஒரே இடத்தில் வெடிபொருட்கள் நிறுத்திவைப்பது குற்றம் என்பதை எச்சரித்த போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 38 எக்ஸ்புளோசிவ் லாரிகளையும், பத்திரமாக அப்புறப்படுத்தி மத்திய சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கான்கார்டு யார்டுக்கு கொண்டு சென்றனர்.
சுங்கத்துறை யார்டில் நிறுத்திவைக்க ஒரு நாளைக்கு லாரி ஒன்றுக்கு 4 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதற்கான தொகையை வெடிபொருள் நிறுவனம் வழங்கும் நிலையில், தனக்கு சொந்தமான லாரிகள் நிறுத்தும் இடத்தில் எக்ஸ்புளோசிவ் லாரிகளை நிறுத்தி வைத்து , லாரி நிறுத்த வாடகை என்று மாதம் 5 லட்சம் ரூபாய் வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது அனுமதியின்றி , கவனக்குறைவாக வெடி பொருட்களை கையாண்டதாக வழக்கு பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களிடம் போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.